தோனிக்கு நடந்த அதே சம்பவம் : தினேஷ் கார்த்திக்கால் பிசிசிஐக்கு நெருக்கடி
சிஎஸ்கேவுக்கு எதிரான ஆட்டத்தில் இருந்து ஆர்சிபி வீரர் தினேஷ் கார்த்திக் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். ஐபிஎல் தொடரின் 22வது லீக் ஆட்டத்தில் நேற்று சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகள் மோதின.
இந்த போட்டியில் டாஸ் வென்றிருந்த ஆர்சிபி அணி பவுலிங்கை தேர்வு செய்தது. எனினும் அதில் ஜொலிக்க முடியவில்லை.
ஹர்ஷல் பட்டேல் இல்லாமல் களமிறங்கிய ஆர்சிபி அணியின் பவுலிங்கை சிஎஸ்கே வீரர்கள் துவம்சம் செய்தனர். சீனியர் வீரர் ராபின் உத்தப்பா 50 பந்துகளில் 88 ரன்களும், இளம் வீரர் ஷிவம் தூபே 46 பந்துகளில் 95 ரன்களும் விளாசினர். இதனால் அந்த அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 216 ரன்களை சேர்த்தது.
இதன் பின்னர் களமிறங்கிய ஆர்சிபி அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. கேப்டன் டூப்ளசிஸ் 8 ரன்கள், அனுஜ் ராவத் 12 ரன்கள், விராட் கோலி 1 என அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர். இதனையடுத்து ஆர்சிபியின் ஒட்டுமொத்த நம்பிக்கையும் உடைந்தது.
ஆனால் ஆர்சிபி அணிக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார் தினேஷ் கார்த்திக். லோயர் ஆர்டரில் களமிறங்கிய அவர், அடுத்தடுத்து சிக்ஸர் மற்றும் பவுண்டரிகள் என விளாசி தோனிக்கு தலைவலி கொடுத்தார். குறிப்பாக முகேஷ் சௌத்ரி வீசிய 17வது ஓவரில் மட்டும் 2 சிக்ஸர்கள், 1 பவுண்டரி உட்பட 23 ரன்களை குவித்தார்.
இறுதியில் 14 பந்துகளில் 2 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 34 ரன்களை விளாசி அவுட்டானார். அதுவும் சிக்ஸருக்கு செல்ல வேண்டிய பந்தை ஜடேஜா, சிரமப்பட்டு பிடித்தார்.
இந்திய அணி அதிக விக்கெட்களை இழந்த போதும்,தோனி களத்தில் இருக்கும் வரை வெற்றி பெறுவோம் என நம்புவார்கள். அதே போன்ற காட்சி நேற்று தினேஷ் கார்த்திக் இருந்த போது நடந்தது.
நடப்பு ஐபிஎல் தொடரில் சிறந்த ஃபினிஷராக தினேஷ் கார்த்திக் உருவெடுத்துள்ளார். சிஎஸ்கே போட்டிக்கு முன்பு வரை 4 ஆட்டங்களில் அவர், ஒரு முறை கூட அவுட்டாகவில்லை. ஒவ்வொரு முறையும் வெற்றி பெற்றுக்கொடுத்தார். இதற்கு காரணம் டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியாவின் ஃபினிஷராக வேண்டும் என்ற அவரின் சபதம் தான்.
தோனிக்கு பிறகு கடைசி நேர வெற்றியை பெற்றுத்தர இன்னும் நல்ல ஃபினிஷர் கிடைக்கவில்லை. ரிஷப் பண்ட் அதிரடியை மட்டுமே நம்புவதால், இக்கட்டான சூழலில் அவர் ஏமாற்றிவிடுகிறார். எனவே சூழ்நிலையை புரிந்து நடக்கும் தினேஷ் கார்த்திக்கிற்கு ஒட்டுமொத்த வீரர்கள், வல்லுநர்கள், ரசிகர்களும் புகழ்ந்து தள்ளி வருகின்றனர்.