4வது போட்டியிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வி - ரசிகர்கள் அதிர்ச்சி

Fans Upset IPL2022 CSKVsSRH SRHVsCSK
By Thahir Apr 09, 2022 03:14 PM GMT
Report

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 17-வது லீக் ஆட்டத்தில் ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதின.

இப்போட்டியில் டாஸ் வென்ற கேன் வில்லியம்சன் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்படி, சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்க வீரர்களாக களம் இறங்கிய உத்தப்பா 11 பந்தில் 15 ரன்னிலும் ருதுராஜ் 16 ரன்னிலும் வெளியேறினர். இதனையடுத்து மொயின் அலி-ராயுடு ஜோடி பவுண்டரி சிக்சர்களுடன் ரன்களை உயர்த்தினர்.

சென்னை அணி 98 ரன்கள் இருக்கும் போது அம்பதி ராயுடு 27 ரன்கள் எடுத்திருந்த நிலையில் வாஷிங்டன் சுந்தர் பந்தில் அவுட் ஆனார்.

48 ரன்கள் எடுத்திருந்த மொயின் அலி ஆட்டமிழந்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டு இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்தது.

இதனால் 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஐதராபாத் அணி விளையாடியது அந்த அணியின் துவக்க வீரர் அபிஷேக் சர்மா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

50 பந்துகளை சந்தித்த அவர் 5 போர், 3 சிக்ஸர்களுடன் 75 ரன்கள் குவித்து அவுட்டானார். மற்றொரு துவக்க வீரர் கென் வில்லியம்சன் 32 ரன்கள் அடித்த நிலையில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

39 ரன்கள் குவித்த ராகுல் திரிபாதியும், பூரன் 5 ரன் எடுத்த நிலையிலும் களத்தில் இருந்தனர். ஐதராபாத் அணி 17.4 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அந்த அணி வெற்றி பெற்றது. சென்னை அணி தொடர்ந்து 4 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளதால் அதன் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.