சென்னை அணியில் இருந்து ஓரம் கட்டப்படும் 3 வீரர்கள் - திறமை இருந்து வாய்ப்பு கொடுக்க மறுப்பு
நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை அணியில் வாய்ப்பு கிடைக்காமல் இருக்கும் 3 வீரர்களை பற்றி நாம் இந்த செய்தியில் காண்போம்.
2022 ஐபிஎல் தொடரானது கடந்த மார்ச் மாதம் 26 ஆம் தேதி தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை விளையாடியுள்ள 7 போட்டிகளில் வெறும் 2 போட்டியில் மட்டும் தான் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது.
இதனால் அந்த அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவதே கடினம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. வழக்கம்போல ஐபிஎல் ஏலத்தில் அதிகமான இளம் வீரர்களை எடுத்த சென்னை அணி அவர்களில் ஒருசிலருக்கு மட்டுமே தொடர்ந்து வாய்ப்பு கொடுத்து வருகிறது. இப்படி இருக்கையில் திறமை இருந்து தொடர்ந்து புறக்கணிக்கப்படும் மூன்று வீரர்கள் பற்றி நாம் காண்போம்.
நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான டெவன் கான்வே, சென்னை அணியின் மிக முக்கிய வீரராக இருந்த டூபிளெசியின் இடத்தை பூர்த்தி செய்ய ஏலத்தில் எடுக்கப்பட்டார். இந்த தொடரில் ஒரு போட்டியில் மட்டுமே வாய்ப்பு கிடைக்கப்பெற்றுள்ள அவர் அப்போட்டியில் சொதப்பியதால் ராபின் உத்தப்பாவை சென்னை அணி தொடக்க வீரராக களமிறங்கி வருகிறது. கான்வேவிற்கு சரியான வாய்ப்பு கிடைத்தால் அவர் நிச்சயம் தன் திறமையை நிரூபிப்பார் என கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்து வருகின்றனர்.
19 வயதுகுட்பட்டோருக்கான உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் மிக முக்கிய வீரராக ஜொலித்த ராஜவர்தன் ஹங்ரேக்கரை ஐபிஎல் ஏலத்தில் 1.5 கோடி ரூபாய் கொடுத்து எடுக்கப்பட்டார். பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் சிறப்பாக செயல்படக்கூடிய அவர் இந்த தொடரில் இதுவரை ஒரு போட்டியில் கூட விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது சோகமான செய்தி.
கடந்த 2018ம் ஆண்டில் இருந்து சென்னை அணியில் தமிழகத்தை சேர்ந்த இளம் வீரரான ஜெகதீஷன் இடம்பெற்றுள்ளார். இவர் சமீபத்தில் நடைபெற்ற சையத் முஸ்தாக் அலி தொடர், விஜய் ஹசாரே தொடர் என அனைத்து உள்ளூர் தொடர்களிலும் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.