அஸ்வினுடன் செளதி, மார்கன் வாக்குவாதம் செய்தது ஏன்?: விவரிக்கும் தினேஷ் கார்த்திக்

Issue IPL 2021 Dinesh Karthik Ravichandran Ashwin
By Thahir Sep 29, 2021 11:39 AM GMT
Report

ஐபிஎல் போட்டியில் ஆட்டம் மட்டுமே பரபரப்பாக இருக்காது, சில சமயங்களில் வீரர்களிடையே ஏற்படும் வாக்குவாதங்களும் சண்டைகளும் கூட பரபரப்பை உண்டாக்கிவிடும்.

நேற்றைய ஆட்டத்தில் அஸ்வினுடன் செளதி, மார்கன் ஆகிய இருவரும் வாக்குவாதம் செய்தது ஐபிஎல் 2021 போட்டியில் புதிய பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

அஸ்வினுடன் செளதி, மார்கன் வாக்குவாதம் செய்தது ஏன்?: விவரிக்கும் தினேஷ் கார்த்திக் | Ipl 2021 Ravichandran Ashwin Issue Dinesh Karthik

நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் தில்லியை கேகேஆர் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த ஆட்டத்தின்போதுதான் கொல்கத்தா வீரர்களுக்கும் அஸ்வினுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுக் கடைசியில் தினேஷ் கார்த்திக் தலையிட்டுச் சமாதானப்படுத்தினார்.

தில்லி இன்னிங்ஸின் கடைசி ஓவரில் செளதி பந்தில் ஆட்டமிழந்தார் அஸ்வின். அப்போது அஸ்வினிடம் வாக்குவாதம் செய்தார் செளதி. அதற்குக் கோபத்துடன் பதில் அளித்தார் அஸ்வின்.

பிறகு அஸ்வினிடம் கேகேஆர் கேப்டன் மார்கனும் வாக்குவாதம் செய்ய அஸ்வின் இன்னும் கோபத்துடன் அவரிடம் பேசினார். இதைப் பார்த்த தினேஷ் கார்த்திக், ஓடிச் சென்று அஸ்வினைச் சமாதானப்படுத்தி அனுப்பினார்.

சக தமிழ்நாட்டு வீரர் டிகேவின் சொல்லுக்கு மதிப்பளித்து அஸ்வினும் பிறகு ஓய்வறைக்குத் திரும்பிச் சென்றார். கொல்கத்தா அணி விளையாடியபோது மார்கனின் விக்கெட்டை அஸ்வின் வீழ்த்தினார்.

அப்போது மிகவும் ஆக்ரோஷமாக அந்த வெற்றியைக் கொண்டாடினார் அஸ்வின். கொல்கத்தா அணியினர் அஸ்வின் மீது கோபத்தை வெளிப்படுத்தியதற்குக் காரணம், 19-வது ஓவரில் ரன் எடுக்க முயன்றபோது திரிபாதி த்ரோ வீசினார்.

அந்தப் பந்து ரிஷப் பந்தின் பேட்டில் பட்டு வேறு திசைக்குச் சென்றது. உடனே இன்னொரு ரன் ஓடலாம் என ரிஷப் பந்தை அஸ்வின் அழைத்தார்.

இதில் கடுப்பான கொல்கத்தா வீரர்கள், அஸ்வின் ஆட்டமிழந்த பிறகு கோபத்தை வெளிப்படுத்தினார்கள்.

என்னதான் நடந்தது? சமாதானத் தூதர் தினேஷ் கார்த்திக் கூறியதாவது: ரிஷப் பந்தின் பேட்டில் பட்டு பந்து வேறு திசைக்குச் சென்றபோது இன்னொரு ரன் ஓட அழைத்தார் அஸ்வின்.

அதை மார்கன் அவ்வளவாக ஏற்றுக்கொள்ளவில்லை என நினைக்கிறேன். த்ரோ வீசப்பட்ட பந்து பேட்ஸ்மேன் அல்லது பேட்டின் மீது பட்டு வேறு திசைக்குச் சென்றால் அதைக் கொண்டு ரன் எடுக்கக் கூடாது என அவர் நினைக்கலாம்.

இது ஒரு மாதிரியான விதிமுறை. இது சுவாரசியமான விஷயமும் கூட. இதில் எனக்கென்று ஒரு கருத்து உண்டு. ஆனால் இந்த நிகழ்வில் சமாதானத் தூதராக இருந்ததில் மகிழ்ச்சி.

எல்லாம் பிறகு சரியாகிவிட்டது என்றார். விதிமுறைப்படி ஸ்டம்ப், பேட்ஸ்மேன், பேட் ஆகியவற்றில் த்ரோ வீசப்பட்ட பந்து மோதி அதே இடத்தில் இல்லாமல் வேறு திசைக்குச் சென்றால் அதைக் கொண்டு பேட்டர்கள் ரன்கள் எடுக்கலாம்.

இதிலுள்ள விநோதம், 2019 ஒருநாள் உலகக் கோப்பையை இங்கிலாந்து அணி வெல்வதற்கு இதேபோன்றதொரு சம்பவம் காரணமாக அமைந்தது.

உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து வீரர் வீசிய த்ரோ, இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸின் பேட்டில் பட்டு பவுண்டரியாக மாறியது.

இங்கிலாந்து அணி உலகக் கோப்பையை வெல்ல இச்சம்பவம் முக்கியக் காரணமாக அமைந்ததால் அப்போது அந்த அணியின் கேப்டனாக இருந்த மார்கன், தற்போது அஸ்வினின் செயலுக்குக் கோபமடைவது பலரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது.