தோல்விக்கு இது தான் முக்கிய காரணம் - ஜடேஜா வேதனை..!
நேற்று 15-வது ஐபிஎல் போட்டி மும்பையில் தொடங்கியது.முதல் போட்டியில் சென்னை அணியும்,கொல்கத்தா அணியும் மோதின.
இந்த முதல் நாள் போட்டியில் சென்னை அணியை வீழ்த்தி கொல்கத்தா அணி வெற்றி பெற்றது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி தொடக்க ஆட்டக்காரரான ருதுராஜ் கெய்க்வாட் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.
மற்றொரு வீரர் கான்வேயும் 3 ரன்களில் ஆட்டமிழந்தார். ஓரளவு அதிரடி காட்டிய உத்தப்பா 28 ரன்களில் வருண்சக்கரவர்த்தி பந்தில் ஆட்டமிழந்தார்.
அம்பத்தி ராயுடு 15 ரன்களில் ரன்-அவுட் ஆனார். இருப்பினும் கடைசி கட்ட ஓவர்களில் டோனி அதிரடி காட்டி ரசிகர்களை மகிழ்வித்தார்.
இதனால், சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்தது. தோனி 38 பந்துகளில் 50 ரன்களுடனும் ஜடேஜா 28 பந்துகளில் 26 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இதையடுத்து 132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணியின் துவக்க வீரர்களாக ரஹானே மற்றும் வெங்கடேஷ் களமிறங்கினர்.
வெங்கடேஷ் 16 ரன்னில் அவுட் ஆனார். அதிரடியாக ஆடிய ரஹானே 34 பந்துகளில் 44 ரன்கள் குவித்தார். அடுத்து வந்த நிதிஷ் ரானா 21 ரன்னில் வெளியேறினார்.
சாம் பிள்ளிங்ஸ் 25 ரன்னில் வெளியேறினார். இறுதியில் கொல்கத்தா அணி 18.3 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் சென்னையை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா அபார வெற்றிபெற்றது.
இந்தநிலையில், கொல்கத்தா அணிக்கு எதிரான இந்த தோல்வி குறித்து பேசிய சென்னை அணியின் கேப்டன் ரவீந்திர ஜடேஜா, “பணி இந்த தொடரில் மிக முக்கிய பங்கு வகிக்கும் என கருதுகிறேன்.
டாஸ் வெல்லும் அணி பந்துவீச்சையே தேர்வு செய்யும். முதல் 6-7 ஓவர்களில் ஆடுகளம் பந்துவீச்சிற்கே சாதகமாக இருந்தது, ஆனால் நேரம் செல்ல செல்ல ஆடுகளம் சற்று பேட்டிங்கிற்கும் கை கொடுத்தது.
எங்களால் முடிந்தவரை வெற்றி பெற போராடினோம். ஒவ்வொரு வீரர்களும் மிக சிறப்பாக பந்துவீசினர், குறிப்பாக டூவைன் பிராவோ மிக சிறப்பாக பந்துவீசினார்” என்று தெரிவித்தார்.