ஏன்ப்பா புரளிய கிளப்புறீங்க? எனக்கு ஹார்ட் அட்டாக்கெல்லாம் இல்லை : பாக்.கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விளக்கம்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், தேர்வுக்குழுத் தலைவருமான இன்சமாம் உல் ஹக்கிற்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும், அதற்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.
பாகிஸ்தான் அணி கடந்த 1992ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்றது. அப்போது அந்த அணியில் இன்சமாம் உல் ஹக் இடம் பெற்றிருந்தார். தற்போது 51 வயதான இன்சமாம் உல் ஹக்,கடந்த 2007ம் ஆண்டு கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற் இன்சமாம், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் பதேர்வுக்குழுத் தலைவராக கடந்த 2016 முதல் 2019ம் ஆண்டுவரை இருந்தார்.
ஆப்கானிஸ்தான் அணிக்கான பயிற்சியாளராகவும் இன்சமாம் உல் ஹக் செயல்பட்டார். இந்த நிலையில், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியானதால் அதிர்ச்சிக்கு உள்ளான அவரது ரசிகர்கள் பலரும், அவர் விரைவில் குணம் பெற வேண்டுமென சமூகவலைதளங்களில் பதிவிட்டனர். இந்த நிலையில் இன்று இன்சமாம் உல் ஹக் தனது யூடியூப் சேனலில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.
அதில் : பாகிஸ்தானிலும் உலகின் மற்ற நாடுகளிலும் உள்ள ரசிகர்கள் எனக்காகப் பிரார்த்தனை செய்ததற்கு நன்றி. பல்வேறு கிரிக்கெட் வீரர்களும் நான் பூரண குணம் பெற வேண்டி வாழ்த்துச் செய்திகளை அனுப்பியுள்ளீர்கள். அதற்கும் நன்றி.எனக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன. எனக்கு மாரடைப்பு ஏற்படவில்லை.
நான் எனது வழக்கமான பரிசோதனைக்காகவே மருத்துவமனை சென்றேன். அங்கே எனக்கு ஆஞ்சியோகிராபி பரிசோதனை செய்தனர். அதில், எனது இதயத்துக்குச் செல்லும் ஒரு ரத்த நாளத்தில் அடைப்பு இருப்பதாகக் கூறினர்.
அதனால் ஸ்டென்ட் பொருத்தப்பட்டது. நான் 12 மணி நேரத்தில் வீடு திரும்பிவிட்டேன். சிகிச்சை நல்லபடியாக முடிந்தது. நான் இப்போது நலமாக இருக்கிறேன் எனக் கூறியுள்ளார்.இதனால் இன்சமாம் உல் ஹக் ரசிகர்கள் தற்போது நிம்மதியடைந்துள்ளனர்.