பாலியல் புகாருக்கு உள்ளான சிறப்பு டிஜிபி மீதான விசாரணை - சிபிசிஐடி அறிக்கை தாக்கல்
தமிழக காவல்துறையைச் சேர்ந்த சிறப்பு டிஜிபி ஒருவர் மீது பெண் எஸ்.பி ஒருவர் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக புகாரளித்திருந்தார். இந்த செய்தி அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. முதல்வரின் பிரச்சாரத்தின்போது பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள சென்ற சிறப்பு டிஜிபி பெண் எஸ்.பி ஒருவரை பணியில் இருந்தபோதே பாலியல் துன்புறத்தலில் ஈடுபடுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக புகாரளிக்கச் சென்ற பெண் எஸ்.பியை தடுக்க செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி சிறப்பு டிஜிபியின் உத்தரவின் பேரில் செயல்பட்டது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருந்தது. இதனைத் தொடர்ந்து செங்கல்பட்டு எஸ்.பி சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தார். மேலும் பல பெண் போலீஸ் அதிகாரிகளும் சிறப்பு டிஜிபி மீது புகார் அளித்திருந்தனர்.
இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது. இந்த வழக்கை மேற்பார்வையிடுவதாகவும் அறிவித்திருந்தது.
செங்கல்பட்டு எஸ்.பியை மட்டும் சஸ்பெண்ட் செய்த அரசு ஏன் சிறப்பி டிஜிபியை சஸ்பெண்ட் செய்யவில்லை என்றும் கேள்வி எழுப்பியிருந்தனர். இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து வந்தது.
இந்நிலையில் இந்த வழக்கில் இன்று நீதிமன்றத்தில் விசாரணை அறிக்கை சீலிடப்பட்ட கவரில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது