என்னை மிரட்டி பாருங்கள்: பாஜகவுக்கு சவால் விட்ட நாராயணசாமி

dmk bjp ntk congress
By Jon Mar 01, 2021 06:06 PM GMT
Report

புதுச்சேரி ஆட்சி கவிழந்ததையடுத்து மத்திய பாஜக அரசை கண்டித்து காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் ஆர்ப்பாட்டத்தில் முதல்வர் நாராயணசாமி இன்று பேசியதாவது, " புதுச்சேரி நடந்ததுபோல் ஜனநாயக படுகொலையை இந்தியாவில் பல மாநிலங்களிலும் பாஜக அரங்கேற்றியுள்ளது. அருணாச்சல பிரதேசம், மணிப்பூர் மாநிலங்களில் குதிரை பேரம் செய்து எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சி கவிழ்ப்பு செய்துள்ளனர்.

கர்நாடகாவில் பல ஆயிரம் கோடி ரூபாய் பேரம் பேசி ஆட்சி மாற்றம் செய்தனர். ராஜஸ்தானில் அவர்களின் வேலை பலிக்கவில்லை. புதுவையில் 5 ஆண்டுகளை நிறைவு செய்துவிட்டோம். 10 நாட்களே தேர்தல் தேதி அறிவிப்புக்கு உள்ளது. தற்போது ஆட்சியை கவிழ்க்கும் செயலை என்ஆர்.காங்கிரஸ், பாஜக, அதிமுகவினர் செய்துள்ளனர்.

அதிகார பலம், பணபலத்தை பயன்படுத்தியும், காங்கிரஸ் கட்சியில் இருந்து சில துரோகிகள் மூலம் ஆட்சியை கவிழ்த்தனர். ஆனால் புதிதாக ஆட்சி அமைக்க முடியவில்லை. புதுவை அரசுக்கு தொல்லை கொடுக்க திட்டமிட்டு ஆளுநர் கிரண்பேடியை அனுப்பி வைத்தார்கள். எங்களை நிம்மதியாக ஆட்சி செய்யவிடவில்லை. ஏற்கனவே காரைக்காலில் புறவழிச்சாலையை திறந்துள்ளோம்.

தற்போது மீண்டும் அதனை திறக்க உள்ளனர். மேரி கட்டடத்தை திறக்க திறப்பு விழா செய்தோம், அதனை தடுத்து நிறுத்தினர். பாஜகவுடன் சேர்பவர்களும் இத்தேர்தலில் காணாமல் போவார்கள். பாஜக டெபாசிட் இழந்த கட்சி. பாஜக, என்ஆர்.காங்கிரஸ், அதிமுக கூட்டணிக்கு நான் சவால் விடுகிறேன். வரும் தேர்தலில் மக்கள் உங்களுக்கு பூஜ்யத்தைத்தான் கொடுப்பார்கள்.

ஹரியாணா மாநிலத்தில் சவுதாலா பேரனின் கட்சியானது பத்து இடங்களை வென்றது. அவர்களை இழுத்து பாஜக கூட்டணி ஆட்சி அமைத்தனர். சில காலம் கழித்து சவுதாலா கட்சியை சேர்ந்த 9 எம்எல்ஏக்களை தங்கள் கட்சியின் வசப்படுத்தினர். இதேநிலைதான் நாளை ரங்கசாமிக்கு ஏற்படும். யார், யாரையோ மிரட்டுகிறார்கள். என்னை மிரட்டி பாருங்கள். கொள்கையும், கோட்பாடும் இல்லாதவர்கள்தான் மிரட்டலுக்கு அடிபணிவார்கள்" என்று குறிப்பிட்டார்.