பாலியல் புகார்களைத் தெரிவிக்க இன்டெர்னல் கமிட்டி... அதிரடி காட்டும் மலையாள சினிமா
பாலியல் புகார்களைத் தெரிவிக்க இன்டெர்னல் கமிட்டி அமைக்கப்பட்டுள்ள நிகழ்வு மலையாள திரையுலகில் நடைபெற்றுள்ளது.
POSH சட்டத்தின்படி எந்த ஒரு நிறுவனமும் பெண்களின் பாலியல் துன்புறுத்தல் குறித்த புகார்களை உடனுக்குடன் அறிந்து அவற்றை நிவர்த்திசெய்ய நம்பத்தன்மையுடன் இருக்கும் இடைநிலை குழுவை மலையாளத் திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்களும் அமைக்க வேண்டும் என கேரள உயர் நீதிமன்றம் கடந்த மாத தொடக்கத்தில் உத்தரவிட்டிருந்தது.
இதனிடையே வைக்கம் முஹமது பஷீரின் சிறுகதையை அடிப்படையாகக் கொண்ட இயக்குநர் ஆஷிக் அபுவின் அடுத்த படமான `நீலவெளிச்சம்' படத்தின் படப்பிடிப்பு கடந்த ஏப்ரல் 26 ஆம் தேதி அன்று கண்ணூரில் தொடங்கியது.
இந்தப் படத்தில் டோவினோ தாமஸ், ரீமா கல்லிங்கல், ரோஷன் மேத்யூ, ஷைன் டாம் சாக்கோ உள்ளிட்டோர் நடிக்க உள்ளதாக அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ள நிலையில், இந்த அறிவிப்புடன் பணியிடத்தில் நடக்கும் பாலியல் அத்துமீறல் குறித்த சம்பவங்கள் பற்றி புகாரளிக்க இடைநிலை குழு (internal committee) அமைக்கப்பட்ட விவரமும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீலவெளிச்சம் படக்குழுவினரால் உருவாக்கப்பட்ட இந்த குழுவில் தலைமை அதிகாரியாக காஸ்ட்யூம் டிசைனர் சமீரா சனீஷும், உறுப்பினர்களாக நடிகை தேவகி பாகி, காயத்ரி பாபு மற்றும் ஹிருஷிகேஷ் பாஸ்கரன், மாயா கிருஷ்ணன் ஆகியோர் இடம் பெற்றுள்ளார்கள்.