ரெப்போ வட்டி விகிதம் ; உயர்கிறது வாகனம் மற்றும் வீடு கடன்களுக்கான வட்டி விகிதம்
ரிசர்வ் வங்கி அறிவிப்பு காரணமாக வீடு, வாகனங்கள் கடன்களுக்கான வட்டி விகிதம் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
உயரும் ரெப்போ வட்டி விகிதம்
கடன் வட்டி விகிதம் தொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் பேசிய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ், ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கையை அறிவித்தார்.
ரெப்போ வட்டி விகிதம் மேலும் 0.25% உயர்த்தப்பட்டதாக அறிவித்துள்ளார். அதாவது, வங்கிகளுக்கு ஆர்பிஐ அளிக்கும் குறுகிய கால கடன் வட்டி விகிதமான ரெப்போ வட்டி விகிதம் 6.25% லிருந்து 6.50% ஆக உயர்த்தப்படுகிறது என்றும் தெரிவித்தார்.
வீடு, வாகனங்களுக்கான கடன் வட்டி விகிதம் உயரும் அபாயம்
ரெப்போ வட்டி விகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளதால் வீடு, வாகனங்களுக்கான கடன் வட்டி விகிதம் மேலும் உயரும் என்றும் வீடு, வாகன வட்டி விகிதம் அதிகரிக்கப்பட்டதால் மக்களின் டெபாசிட்டுக்கான வட்டி விகிதமும் அதிகரிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.இந்த வட்டி விகிதம் உயர்வால் வங்கிகளில் டெபாசிட் செய்தவர்களுக்கு கூடுதல் வட்டி கிடைக்கும். மத்திய பட்ஜெட்டுக்கு பிறகு இந்தாண்டு முதல் முறையாக வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளது ரிசர்வ் வங்கி.
ரிசர்வ் வங்கி நிர்ணயித்து இருந்த 6%-க்குள் பணவீக்கம் உள்ள நிலையில், பணவீக்கம், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தவே இந்த நடவடிக்கை என ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்ததாஸ் விளக்கம் அளித்தார்.
ரிசர்வ் வங்கி ஆளுநர் மேலும் கூறுகையில், கடந்த மூன்று ஆண்டுகளில் முன்பு இல்லாத நிகழ்வுகள் உலகம் முழுவதும் நிதியியல் கொள்கையை சோதிக்கின்றன.
வளர்ந்து வரும் சந்தைப் பொருளாதாரங்கள், பொருளாதார நடவடிக்கைகளை ஆதரிப்பதற்கும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கும் கொள்கை நம்பகத்தன்மையைக் காப்பாற்றுவதற்கும் இடையே கடுமையான பரிமாற்றங்களை எதிர்கொள்கின்றன.
உலகப் பொருளாதாரக் கண்ணோட்டம் சில மாதங்களுக்கு முன்பு இருந்ததைப் போல் இப்போது மோசமாகத் தெரியவில்லை, முக்கியப் பொருளாதாரங்களில் வளர்ச்சி வாய்ப்புகள் மேம்பட்டுள்ளன, அதே நேரத்தில் பணவீக்கம் இறங்குமுகமாக உள்ளது எனவும் குறிப்பிட்டார்.
GDP வளர்ச்சி
மேலும், 2023-24 4வது காலாண்டில் பணவீக்கம் சராசரியாக 5.6% ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2023-24 ஆம் ஆண்டிற்கான உண்மையான GDP வளர்ச்சியானது 6.4% ஆகவும், Q1 இல் 7.8% ஆகவும், Q2 இல் 6.2% ஆகவும், Q3 இல் 6% ஆகவும் மற்றும் Q4 இல் 5.8% ஆகவும் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, 2022 மே மாதத்தில் 4%-ஆக இருந்த ரெப்போ வட்டி விகிதம் ஓராண்டுக்குள் 6.5%-ஆக அதிகரித்துள்ளது. ரெப்போ வட்டி விகிதம் உயர்வால் தனிநபர், வீடு, வாகன கடன்களின் வட்டி விகிதம் உயரும் என பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.