இன்ஸ்டாகிராமில் பழக்கம் - தொழிலதிபரின் 13 வயது மகளை வீடியோ எடுத்து மிரட்டிய இளைஞர்: அதிர்ச்சி சம்பவம்
கோவையில் 13 வயது சிறுமி இன்ஸ்டாகிராமில் இளைஞர் ஒருவருடன் பழகி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை பீளமேடு பகுதியை சேர்ந்த தொழிலதிபரின் 13 வயது மகள் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். ஆன்லைன் வகுப்புக்காக சிறுமிக்கு பெற்றோர் ஸ்மார்ட்போன் ஒன்றை வாங்கிக் கொடுத்துள்ளனர்.
பெற்றோருக்கு தெரியாமலேயே இன்ஸ்டாகிராமை டவுன்லோட் செய்த சிறுமி, அதன் மூலம் தனது நண்பர்களுடன் பேசி வந்துள்ளார். இந்த நிலையில், இன்ஸ்டாகிராம் மூலம் ராஜபாளையத்தை சேர்ந்த ஸ்ரீநாத் என்ற சாப்ட்வேர் இன்ஜினியருக்கும் சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
தினமும் ஸ்ரீநாத்துடன் சிறுமி சாட்டிங் செய்து வந்துள்ளார். தங்கள் மகள் ஆன்லைனில் படிப்பதாக நினைத்து பெற்றோரும் அதை கவனிக்காமல் இருந்துள்ளனர்.
ஒரு கட்டத்தில் சிறுமியை காதலிப்பதாக கூறிய ஆசைவார்த்தை காட்டிய ஸ்ரீநாத், வெளியே அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அது மட்டுமல்லாமல், அதை வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு பணம் கொடுக்குமாறு மிரட்டியுள்ளார்.
பயந்து போன சிறுமி தனது பெற்றோருக்கு தெரியாமல் வீட்டில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக நகையை எடுத்து ஸ்ரீநாத்திடம் கொடுத்துள்ளார். இப்படியே சிறுமி 60 சவரன் நகை வரை கொடுத்ததாக தெரிகிறது. வீட்டில் நகைகள் காணாமல் போனதைக் கண்டு சிறுமியிடம் விசாரித்த போது ஸ்ரீநாத் குறித்து பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக கோவை கிழக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் பேரில் ஸ்ரீநாத் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருக்கும் ஸ்ரீநாத்தை தேடி வருகின்றனர்.