காதலிக்காக வெளிநாட்டில் இருந்து ஆசையாய் வந்த இளைஞர் - ஆனால்..காத்திருந்த அதிர்ச்சி!
காதலியை கரம்பிடிக்க துபாயில் இருந்து ஆசையாக வந்த இளைஞருக்கு நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்ஸ்டா பழக்கம்
பஞ்சாப், ஜலந்தர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தீபக் குமார்(24). இவர் துபாயில் வேலை செய்து வருகிறார். இவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் மூலம் மன்பிரீத் கவுர் என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து அது நாளடைவில் காதலாக மாறியுள்ளது. மன்பிரீத் கவுர் தனது புகைப்படங்களை மட்டும் தீபக் குமாருக்கு அனுப்பி வைத்துள்ளார். ஆனால் இருவரும் நேரில் சந்தித்துக் கொள்ளவில்லை.
இதற்கிடையில் தீபக் காதலை வீட்டில் கூறி சம்மதம் வாங்கியுள்ளார். தொடர்ந்து திருமணத்திற்கு தேதி குறித்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தீபக்கும் இந்தியா திரும்பியுள்ளார். ரோஸ் கார்டன் பேலஸ் என்ற மண்டபத்திற்கு வருமாறு மன்பிரீத் கவுர் கூறியுள்ளார்.
ஏமாந்த நபர்
ஆனால் அங்கு சென்று விசாரித்ததில் அப்படி ஒரு மண்டபமே இல்லை எனக் கூறியுள்ளனர். கவுரின் மொபைல் போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்துதான் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்துள்ளனர். உடனே இச்சம்பவம் குறித்து தீபக் வீட்டார் போலீஸில் புகாரளித்துள்ளனர்.
திருமண செலவுகளுக்காக மன்பிரீத் கவுருக்கு சுமார் 50 ஆயிரம் ரூபாயை அனுப்பி வைத்ததாகவும், கேட்டரிங் சர்வீஸ், வீடியோகிராபர், வாடகை கார்கள் என அனைத்து ஏற்பாடுகளையும் செய்ததால் பொருளாதார ரீதியாக மட்டுமின்றி, மனதளவிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதன் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.