ஹரிபத்மனுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க பரிந்துரை - விசாரணை குழு அறிக்கை தாக்கல்
கலாஷேத்ரா விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஆசிரியர் ஹரி பத்மனுக்கு அதிகபட்ச தண்டனை அளிக்கும் படி ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான விசாரணை குழு பரிந்துரை செய்துள்ளது.
கலாஷேத்ரா விவகாரம்
திருவான்மியூரில் உள்ள நடன கல்லூரியான கலாஷேத்ரா அறக்கட்டளை வளாகத்தில் உள்ள ருக்மணி அருண்டேல் கல்லூரியில் பயின்று வந்த மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார்கள் எழுந்தன.
இந்த விவகாரத்தில், முன்னாள் மாணவி ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில், கல்லூரியின் நடன துறை உதவி பேராசிரியரான ஹரி பத்மன் மீது அடையாறு அனைத்து மகளிர் போலீசார், வழக்கு பதிவு செய்து ஏப்ரல் 3ஆம் தேதி கைது செய்தனர்.
விசாரணை குழு அமைப்பு
கலாஷேத்ராவில் எழுந்த இந்த பாலியல் புகார்களை விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி, டி.ஜி.பி. மற்றும் டாக்டர் அடங்கிய விசாரணை குழு அமைக்கப்பட்டது. அதற்கு ஓய்வு பெற்ற நீதிபதி கண்ணன் தலைமை வகித்தார். விசாரணை குழு விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் ஹரி பத்மனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
அதிகபட்ச தண்டனை வழங்கவேண்டும்
இந்நிலையில் தான் தற்போது, விசாரணை குழு தங்களது அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. அந்த அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்ட ஹரி பத்மனுக்கு தங்கள் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் அதிகபட்ச தண்டனை வழங்கப்பட பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
மேலும், விசாரணை அறிக்கையில் சமர்ப்பிக்கப்பட்ட விவரங்களை பொதுவெளியில் வெளியிட வேண்டாம் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.