‘க்யூ ஆர்’ கோடு ஸ்டிக்கர் மூலம் நூதன மோசடி - பொதுமக்களை ஏமாற்றும் அதிர்ச்சி சம்பவம்
திருப்பூரில் க்யூ ஆர் கோடு ஸ்டிக்கர் மூலம் கொள்ளையர்கள் நூதன முறையில் கைவரிசை காட்டிய சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
திருப்பூர் அடுத்த முதலிபாளையத்தில் துரைசாமி என்பவர் ஹோட்டல் மற்றும் ஃபாஸ்ட்புட் கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் சில தினங்களுக்கு முன் சாப்பிட சென்ற ஒருவர் க்யூ ஆர் கோடு மூலம் பணம் செலுத்த முயன்றுள்ளார்.
ஆனால் துரைசாமியின் வங்கி கணக்குக்கு பணம் செல்லாமல் இருந்துள்ளது. இதனால் மீண்டும் ஒரு முறை க்யூஆர் கோடை ஸ்கேன் செய்த போது அதில் வேறு ஒருபெயர் காட்டியுள்ளதை வாடிக்கையாளர் கடையின் உரிமையாளர் துரைசாமியிடம் தெரிவித்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர் க்யூஆர் கோடை சோதனை செய்த போது அதில் போலியான வேறு ஒரு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து சிசிடிவி கேமராவை ஆய்வு செய்த போது நள்ளிரவில் பைக்கில் ஹெல்மெட் அணிந்து வந்த நபர் ஒருவர் சம்பந்தப்பட்ட ஹோட்டலில் ஒட்டப்பட்ட க்யூஆர் கோட்டின் மீது வேறு ஸ்டிக்கரை ஒட்டிச் சென்றது தெரியவந்தது.
மேலும் அந்தப்பகுதியில் உள்ள பல்வேறு கடைகளிலும் இதேபோல் நூதன முறையில் மர்ம நபர் கைவரிசை காட்டியுள்ளது தெரிய வந்தது. இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் ஒன்று சேர்ந்து ஊத்துக்குளி போலீசில் புகார் அளித்த நிலையில் க்யூஆர் கோடுகளை சுவர் மற்றும் வண்டிகளில் ஒட்ட வேண்டாம் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். இந்த சம்பவம் திருப்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.