நெருங்கி வருகிறது ‘யாஸ்’ புயல் - தமிழகம், ஆந்திரா, ஒடிசா, மேற்கு வங்கம், அந்தமான் தீவுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!
'யாஸ்' புயலை எதிர்கொள்ள தேவையான முன்னேற்பாடுகளை செய்யுமாறு தமிழகம், ஆந்திரா, ஒடிசா, மேற்கு வங்கம், அந்தமான் தீவுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்திருக்கிறது.
அரபிக் கடலில் உருவான டவ் தே புயலை தொடர்ந்து வங்கக் கடலில் யாஸ் புயல் தற்போது உருவாகியிருக்கிறது.
இந்த புயல் வடமேற்கு நோக்கி நகர உள்ளது. வரும் 26-ம் தேதி ஒடிசா, மேற்கு வங்கம் இடையே கரையை கடக்கும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இதையடுத்து, அனைத்து விதமான மருத்துவ முன்னேற்பாடுகளை செய்யுமாறு தமிழகம், ஆந்திரா, ஒடிசா, மேற்கு வங்கம், அந்தமான் தீவுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை செய்துள்ளது.
இது குறித்து மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண் வெளியிட்டுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
நிலைமையை கையாள மாநில அரசுகளுக்கு, மத்திய சுதாதார அமைச்சகம் அனைத்து உதவிகளும் செய்யத் தயாராக உள்ளது. மாநில அரசுகள் சுகாதாரத் துறைக்கான அவசர கால நடவடிக்கை மையம் அல்லது கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்த வேண்டும்.
கடலோர மாவட்டங்களில் அப்புறப்படுத்தப்படும் மக்களுக்கு மருத்துவம் மற்றும் சுகாதார வசதிகளை திட்டமிட வேண்டும். அங்கு தங்கவைக்கப்படும் மக்கள் கொரோனா அறிகுறி உள்ளவர்களுக்கு விரைவு பரிசோதனை வசதி செய்ய வேண்டும்.
புயலால் தகவல் தொடர்பு பாதிக்கும் என்பதால் மருத்துவமனைகளுக்கு செயற்கைகோள் தொலைபேசி வழங்க வேண்டும். தாழ்வான பகுதிகளை அடையாளம் கண்டு பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு ராஜேஷ் பூஷண் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.