விதிமுறை மீறி கொண்டாடத்தில் ஈடுபடுவதை தடுத்து நிறுத்த வேண்டும் - தேர்தல் ஆணையம் அவசர கடிதம்!
தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய 5 மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல், மார்ச் 27ஆம் தேதி தொடங்கி, பல்வேறு கட்டங்களாக நடைபெற்று முடிவுற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தற்போது ஒவ்வொரு தொகுதியிலும் முன்னிலை நிலவரங்கள் வெளியாகிக் கொண்டு வருகிறது.
இதனையடுத்து, இந்திய தேர்தல் ஆணையம், மாநில மற்றும் யூனியன் பிரதேச தலைமைச் செயலாளர்களுக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பியிருக்கிறது.
அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது -
வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, சில மாநிலங்களில் சில இடங்களில், தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை மீறி மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபடுவது, ஊடகத்தின் மூலமாக தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.அவை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்" என கூறியுள்ளது.

மேலும் அந்தக் கடிதத்தில், இதுபோன்ற செயல்களுக்கு (கொண்டாட்டங்களுக்கு) ஏற்கனவே தடை விதித்துள்ள தேர்தல் ஆணையத்தின் நெறிமுறைகளைக் கடுமையாக அமல்படுத்த வேண்டும் என மீண்டும் தலைமைச் செயலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இந்தக் கொண்டாட்டங்களைத் தடுக்கத் தவறிய அதிகாரிகளை உடனடியாக இடைநீக்கம் செய்யவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.