என்னப்பா இப்படியாயிட்டு : இந்திய அணியின் வெற்றியைப் பறித்த வெளிச்சம் , நடந்தது என்ன?

INDvsNZ KanpurTest
By Irumporai Nov 29, 2021 12:00 PM GMT
Report

இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி கான்பூரில் கடந்த வியாழன் அன்று தொடங்கியது. முதலில் டாஸ் வென்று பேட்டிங் ஆடிய இந்திய அணி முதல் இன்னங்சில் 345 ரன்கள் குவித்தது.

தனது முதல் டெஸ்ட் போட்டியிலேயே ஷ்ரேயஸ் ஐயர் சதம் அடித்து அசத்தினார். அதன் பிறகு களம் இறங்கிய நியூஸிலாந்து அணி 296 ரன்கள் அடித்தது.

9 ரன்கள் முன்னிலையில் இரண்டாம் இன்னிங்சில் ஆடிய இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் ரன்கள் அடிக்க தவறினர். முதல் இன்னிங்சில் சிறப்பாக ஆடிய ஷ்ரேயஸ் இரண்டாவது இன்னிங்சிலும் பொறுப்பாக ஆடி அரைசதம் அடித்தார்.

கடைசியில் சிறப்பாக ஆடிய சகா அரைசதம் அடித்து இந்திய அணிக்கு நல்ல ஸ்கோரை எட்ட உதவினார். 234 ரன்களுக்கு 7 விக்கெட் இழந்த நிலையில் டிக்லர் செய்தது இந்தியா. 284 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலையில் நியூசிலாந்து அணி களம் இறங்கியது.

4ம் நாள் ஆட்ட நேர முடிவில் நியூ. அணி 1 விக்கெட் இழப்பிற்கு 4 ரன்கள் எடுத்து இருந்தது. இன்று கடைசி நாள் ஆட்டம் நடைபெற்றது. ஆரம்பம் முதலே அசத்தி வந்த இந்திய பவுலர்கள் நியூ. விக்கெட்களை அடுத்தடுத்து வீழ்த்தினர்.

ஆரம்பத்தில் அசத்திய நியூசிலாந்து பேட்ஸ்மென்கள் பின்பு சொதப்பினர். மிடில் ஆட்டரில் இறங்கிய பேட்ஸ்மென்கள் அனைவரும் விக்கெட்களை இழக்க இந்திய அணி வெற்றியை நோக்கி சென்றது.

முதல் நாளில் இருந்தே ஆட்ட நேரம் முடியும் முன்பே, போதிய வெளிச்சம் இல்லாமல் போட்டி நிறுத்தப்பட்டது. இன்றும் அதே காரணத்தினால் போட்டி கடைசியில் நிறுத்தப்பட்டது. கடைசி ஒரு விக்கெட் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இருந்த இந்திய அணிக்கு இது ஏமாற்றத்தை அளித்தது. இதனால் முதல் போட்டி டிராவில் முடிந்தது.

அதே சமயம், நியூசிலாந்துக்கு எதிராக நடக்கும் முதல் டெஸ்டில் அறிமுக வீரராக இடம் பிடித்த ஷ்ரேயாஸ் அய்யர், முதல் இன்னிங்சில் சதம் விளாசி அசத்தினார். அறிமுக டெஸ்டில் சதம் அடித்த 16வது இந்திய வீரர் என்ற பெருமையும் அவருக்கு கிடைத்தது.

இந்த நிலையில், 2வது இன்னிங்சில் அவர் அரை சதம் அடித்தார். இதன் மூலமாக, அறிமுக டெஸ்டில் சதம் மற்றும் அரை சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனை ஷ்ரேயாஸ் வசமாகி உள்ளது.