எகுறு அல்லு.. சில்லு எட்டி செதறனும் - பட்டைய கிளப்பும் அக்சர், அஷ்வின் : வெற்றி பெறுமா இந்திய அணி?

INDvNZ TeamIndia IndvNZ1stTest
By Irumporai Nov 29, 2021 09:19 AM GMT
Report

இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் கடைசி நாளில் தேநீர் இடைவேளையின்போது நியூசிலாந்து அணி, 4 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 டி20, 2 டெஸ்டுகளில் விளையாடுகிறது நியூசிலாந்து அணி. 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரை 3-0 என முழுமையாக வென்றது இந்திய அணி.

டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்ட் கான்பூரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரஹானே, பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 111.1 ஓவர்களில் 345 ரன்கள் எடுத்தது.

அறிமுக டெஸ்டில் சிறப்பாக விளையாடி சதமடித்த ஷ்ரேயஸ் ஐயர், 105 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்தின் செளதி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 296 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. டாம் லேதம் 95 ரன்களும் வில் யங் 89 ரன்களும் எடுத்தார்கள்.

அக்‌ஷர் படேல் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்திய அணி 2-வது இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்புக்கு 234 ரன்கள் எடுத்தது. ஷ்ரேயஸ் ஐயர் 65 ரன்களும் சஹா ஆட்டமிழக்காமல் 61 ரன்களும் எடுத்தார்கள். நியூசிலாந்து அணி வெற்றி பெற 284 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

நியூசிலாந்து அணி 4-ம் நாள் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 4 ரன்கள் எடுத்தது. டாம் லேதம், சோமர்வில் களத்தில் இருந்தார்கள். 5-ம் நாளன்று இந்திய அணியின் சுழற்பந்துவீச்சில் நியூசிலாந்து அணி சுலபமாக வீழ்ந்துவிடும் எனப் பலராலும் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் தொடக்க வீரர் டாம் லேதமும் நைட்வாட்ச்மேனாகக் களமிறங்கிய சோமர்வில்லும் அபாரமாக விளையாடி, இந்திய அணியின் பந்துவீச்சை நன்கு எதிர்கொண்டார்கள். பலவகையிலும் இந்தியப் பந்துவீச்சாளர்கள் விக்கெட் எடுக்க முயன்றும் தோல்வியே கிடைத்தது.

இன்று முதல் 31 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 75 ரன்கள் எடுத்து ஆச்சர்யப்படுத்தியது நியூசிலாந்து அணி. 5-ம் நாளில் உணவு இடைவேளையின்போது நியூசிலாந்து அணி, 35 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 79 ரன்கள் எடுத்தது. லேதம் 35, சோமர்வில் 36 ரன்களும் எடுத்துக் களத்தில் இருந்தார்கள்.

9 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் நியூசிலாந்து அணி வெற்றி பெற 60 ஓவர்களில் 205 ரன்கள் தேவைப்பட்டது. உணவு இடைவேளைக்குப் பிறகு இந்திய அணி பந்துவீச்சாளர்கள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்தார்கள்.

110 பந்துகளை எதிர்கொண்டு 36 ரன்கள் எடுத்த சோமர்வில், உமேஷ் யாதவ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். நன்கு விளையாடி வந்த டாம் லேதம் 52 ரன்களில் அஸ்வின் பந்துவீச்சில் வீழ்ந்தார்.

இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஹர்பஜன் சிங்கைத் தாண்டிச் சென்று அதிக டெஸ்ட் விக்கெட்டுகள் எடுத்த 3-வது இந்தியப் பந்துவீச்சாளர் என்கிற பெருமையை அஸ்வின் பெற்றார்.

6 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் நியூசிலாந்து அணி வெற்றி பெற 159 ரன்கள் தேவைப்படுகிறது. இதனால் கான்பூர் டெஸ்ட் பரபரப்பான கட்டத்தை அடைந்துள்ளது.