2021 புதிய தொழில் கொள்கையை வெளியிட்டார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
தமிழகத்தில் தகுதி வாய்ந்த தொழில்களுக்கு முதல் நான்கு ஆண்டு காலம் செயல்பட தேவையான அனுமதியிலிருந்து விலக்கு அளிக்கும் வகையில் “FAST TN” என்ற திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழக அரசின் சார்பில் தமிழ்நாடு தொழில் கொள்கை 2021யை வெளியிட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இதனைத் தெரிவித்தார்.
பெரும் தொழில் நிறுவனங்கள் தமிழகத்தில் தொழிற்சாலைகள் அமைத்து தங்கள் தொழில்களை பெருக்கிட வழி செய்யும் பொருட்டு தமிழக அரசு, தொழில் கொள்கைகளை வெளியிட்டு வருகிறது. இதன் மூலம், சர்வதேச தொழில் நிறுவனங்கள் தமிழகத்தில் தொழிற்சாலைகளை நிறுவுவதற்கு தமிழக அரசு வழி செய்து தருகிறது. தொழில் புரிவதற்கான ஏற்ற சூழ்நிலையை தமிழக அரசு ஏற்படுத்தி தருவதால் தொழில் நிறுவனங்களும் இங்கு தொழிற்சாலைகளை அமைத்திட ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கொரோனா காலத்திலும் தமிழக அரசு 61 ஆயிரம் 500 கோடி ரூபாய் மதிப்பிலான தொழில் முதலீடுகளை ஈர்த்து சாதனை புரிந்துள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு தொழில் கொள்கை 2021 மற்றும் தமிழ்நாடு குறு, சிறு மற்றும், நடுத்தர தொழில் நிறுவனங்களின் கொள்கை 2021யை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டார்.
அப்போது பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் 20 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில் புதிய தொழில் கொள்கை அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கு வேலை வாய்ப்பை வழங்கும் விதமாக புதிய தொழில் கொள்கை அமைந்துள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்.
கடந்த 6 ஆண்டுகளில் 6.53 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் போடப்பட்ட ஒப்பந்தங்களில் 81 % பல்வேறு நிலைகளில் செயல்பாட்டில் உள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் எம்.சி. சம்பத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.