விமானத்தில் ஏறிய தாய் - பைலட்டாக இருந்த மகன் கொடுத்த சர்ப்ரைஸ்!
பயணியாக வந்த தாய்க்கு பைலட்டான மகன் கொடுத்த சர்ப்ரைஸ் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பைலட் மகன்
ஆந்திராவைச் சேர்ந்தவர் ஜஸ்வந்த் வர்மா. இவர் இண்டிகோ விமானத்தில் பைலட்டாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் ஜஸ்வந்த் வர்மா கேப்டனாக இருந்த இண்டிகோ விமானத்தில் முதல் முறையாக அவரது தாய் பயணிக்க வந்தார்.
அப்போது விமானத்தில் வாசலில் வந்து நின்று ஜஸ்வந்த் வர்மா வரவேற்றார். தாயிக்கு பூங்கொத்து கொடுத்து காலில் விழுந்த ஆசீர்வாதம் பெற்றார். அதனை கண்டு அவரது தாய் மகிழ்ச்சியடைந்தார். சகபயணிகள் கைத்தட்டினர்.
அதன்பிறகு கேப்டன் ஜஸ்வந்த் வர்மா பயணிகள் மத்தியில் பேசினார். அப்போது பேசுகையில், ‛‛நாங்கள் திருப்பதி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர்கள். நான் விமானியாக வேண்டும் என்பது எங்களின் கற்பனைக்கு எட்டாத ஒன்றாக இருந்தது.
தாய்க்கு சர்ப்ரைஸ்
ஆனால் தூக்கமின்றி உழைத்து, கல்வி கடன் வாங்கி, இஎம்ஐ செலுத்தி என்னை இந்த நிலைமைக்கு கொண்டு வந்தவர் என் அம்மா தான். என் அம்மாவால் தான் நான் இங்கே ஒரு கேப்டனாக நிற்கிறேன். விமானத்தில் பறக்கிறேன். என் கனவை எட்டிபிடித்து வாழ்க்கையை ரசிக்கிறேன்.
ஒரு வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால் என் அம்மாவால் தான் இன்று நான் இப்படி இருக்கிறேன்'' என்றார். மேலும் தனது அம்மாவை பார்த்து, ‛‛இது எல்லாம் உங்களால் தான் சாத்தியமானது.
நீங்கள் இல்லாவிட்டால் இந்த பணிக்கு வந்திருக்க மாட்டேன்'' என தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வைரலாகி பரவி வருகிறது.