விமான பயணத்தின் போது கதறி அழுத பணிப்பெண் - நெகிழ்ந்து போன பயணிகள்
விமானத்தில் பயணத்தின் நடுவே பணிப்பெண் ஒருவர் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
இந்தியாவை சேர்ந்த விமான நிறுவனமான இண்டிகோவில் பணிப்பெண்ணாக சுரபி நாயர் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் தன்னுடைய பணியில் இருந்து விலக முடிவெடுத்த நிலையில் அச்செய்தியை விமான பயணத்தின் நடுவே பயணிகள் மற்றும் சக ஊழியர்களிடம் தெரிவித்தார்.
அப்போது கண்கலங்கிய சுரபி நாயர், தனக்கு வாய்ப்பு அளித்ததற்காக நன்றி தெரிவித்தார். அவர் பேசும் போது, இப்படி ஒரு நாள் வரும் என்று நான் நினைத்து பார்த்ததே இல்லை. இது என் இதயத்தின் ஒரு பகுதி போன்றது. எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. இண்டிகோ நிறுவனம் எனக்கு எல்லாவற்றையும் கொடுத்துள்ளது. இது வேலை செய்ய ஒரு அற்புதமான நிறுவனம். அருமையான அனுபவம். இங்கிருந்து நான் போக விரும்பவில்லை என்றாலும் போக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன் என நா தழுதழுக்க கூறினார்.
இந்த வீடியோவை அமெரிக்காவை சேர்ந்த பாடகி மற்றும் ரேடியோ ஜாக்கியான அம்ருதா சுரேஷ் என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனைத் தொடர்ந்து இண்டிகோ நிறுவனத்தில் பணியாற்றிவரும் ஊழியர்கள் பலரும் சுரபியின் கனிவான குணத்தையும், அவரது உழைக்கும் விதம் குறித்தும் பாராட்டிய நிலையில் அவரது எதிர்காலம் சிறப்பாக அமைய வாழ்த்து தெரிவித்துள்ளனர்.