விமான நிலையத்தில் ஒரு டீ விலை ரூ.10 தான் - அட, எங்கே தெரியுமா?
விமான நிலையம் ஒன்றில் ஒரு டீ விலை ரூ.10 என்பது கவனம் ஈர்த்துள்ளது.
டீ விலை ரூ.10
விமான நிலையங்களில் விற்பனை செய்யப்படும் டீ, காபி மற்றும் பிற உணவுப் பொருட்களின் விலை அதிக அளவில் இருப்பதாக பயணிகள் தொடர் குற்றச்சாட்டு வைத்து வந்தனர்.
மேலும், விலையை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து, மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் உதான் யாத்ரி கஃபே என்ற பெயரில் மலிவு விலை உணவகங்களை விமான நிலையங்களில் தொடங்க இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டது.
உதான் யாத்ரி கஃபே
அதன்படி, கடந்த டிசம்பர் மாதம் முதன்முறையாக கொல்கத்தாவில் இருக்கும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையத்தில் இந்த உணவகம் திறக்கப்பட்டது. இங்கே ஒரு டீயின் விலை 10 ரூபாய் தான். நாள்தோறும் இந்த கடைக்கு சராசரியாக 900 பேர் வருகை தருகின்றனர்.
இதுகுறித்து பேசிய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராமமோகன் நாயுடு, "நான் விமான போக்குவரத்து துறை அமைச்சராக பொறுப்பேற்றதிலிருந்து இந்தியாவில் விமான போக்குவரத்து மலிவானதாக மாற வேண்டும் என பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறேன்.
அதன் ஒரு பகுதியாக தான் உதான் யாத்ரி கஃபே திட்டத்தை தொடங்கி இருக்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார். இதற்கு கிடைத்த மாபெரும் வரவேற்பின் படி, இனி நாட்டின் அனைத்து விமான நிலையங்களுக்கும் உதான் யாத்ரி கஃபே கடைகள் விரிவாக்கம் செய்யப்படும் என கருதப்படுகிறது.