இந்தியாவில் அமையும் முதல் தனியார் தங்க சுரங்கம் - இனி தங்கம் விலை குறையுமா?
இந்தியாவின் முதல் தனியார் தங்க சுரங்கம் அதன் செயல்பாட்டை துவங்க உள்ளது.
தனியார் தங்க சுரங்கம்
தங்கத்தின் விலை நாளுக்கு நாள் ஜெட் வேகத்தில் உயர்ந்தாலும், தங்கத்தை பயன்படுத்துவதில் இந்தியர்களே உலகளவில் முன்னிலையில் உள்ளனர்.
இந்தியாவில் தங்க சுரங்கங்கள் அனைத்துமே அரசின் கட்டுப்பாட்டிலேயே இருந்து, அரசு நிறுவனங்களே தங்கத்தை வெட்டி எடுத்து வரும் நிலையில், முதல் தனியார் தங்க சுரங்கம் ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஜோன்னகிரி பகுதியில் அமைய உள்ளது.
2250 ஏக்கர்
கர்னூல் பகுதியில் தங்கம் இருப்பதை 1994ஆம் ஆண்டே இந்திய புவியியல் ஆய்வு மையம் கண்டுபிடித்தது. தொடர்ந்து ஆய்வு பணிகளை மேற்கொள்ள தனியார் நிறுவனங்களையும் அழைத்தது போது பெரிய முதலீடு தேவை என்பதால் எந்த நிறுவனமும் ஆய்வு மேற்கொள்ள முன்வரவில்லை.
2005 ஆம் ஆண்டு வெளிநாட்டு நிறுவனங்களும் முதலீடு செய்யும் வகையில் சுரங்க குத்தகை செயல்முறை சட்டதிட்டங்களில் சில தளர்வுகளை மத்திய அரசு கொண்டு வந்தது. அதன் பின்னர் பெங்களூரை சேர்ந்த ஜியோமைசூர் சர்வீசஸ் லிமிடெட் ஜொன்னகிரி மண்டலத்தில் ஆய்வு செய்ய உரிமம் பெற்றது.
2013ஆம் ஆண்டில் தங்கம் எடுப்பதற்கான ஆரம்ப கட்ட பணிகளை செய்வதற்கான அனுமதியை பெற்று, 2023ஆம் ஆண்டில் திட்ட அனுமதியை பெற்றது. இதனிடையே ஜியோமைசூர் நிறுவனத்தின் 40% பங்குகளை டெக்கான் கோல்ட் மைன்ஸ் நிறுவனம் கைப்பற்றியது. முதற்கட்ட ஆய்வுக்காக துக்கலி மற்றும் மட்டிகேரா மண்டலங்களில் 750 ஏக்கர் நிலத்தை வாங்கியதோடு, 1,500 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்துள்ளது.
ஆண்டுக்கு 750 கிலோ
இது குறித்து பேசிய ஜியோமைசூரின் நிர்வாக இயக்குனர் மோடலி ஹனுமா பிரசாத், "இங்கு சுமார் 30,000 ஆழ்துளைக் கிணறுகள் மூலம் சோதனைகளை நடத்தி வருகிறோம். 2 ஆண்டு ஆய்வுகளில் நம்பிக்கையளிக்கும் முடிவு வந்ததையடுத்து, இங்கு தங்கத்தை வெட்டி எடுக்கும் முடிவுக்கு வந்துள்ளோம். கடந்த டிசம்பர் மாதமே பணிகளை தொடங்க விரும்பிய நிலையில், சில ஆய்வு முடிவுகள் வர தாமதம் ஆனது" என கூறியுள்ளார்.
ஜோன்னாகிரி பகுதியில் சுமார் ரூ.320 கோடியை முதலீடு செய்து பெரிய அளவிலான செயலாக்க இயந்திரங்களை நிறுவியுள்ளது. இந்நிறுவனம் அடுத்த 25 ஆண்டுகளுக்கு இங்கு தங்கத்தை வெட்டி எடுக்கும் பணிகளில் ஈடுபடும். 20 டன் பாறைகளில் இருந்து 40-50 கிராம் தங்கம் வெட்டி எடுக்கப்பட்டுள்ள நிலையில், முழுமையான செயலாக்க பணிகள் தொடங்கியதும் ஆண்டுக்கு 750 கிலோ தங்கத்தை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது.
ஆனால் இந்தியா உலக நாடுகளில் இருந்து தங்கத்தை இறக்குமதி செய்வதில் இது மிகச்சிறிய அளவே என்பதால் தங்கம் விலை குறைய வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.