ராமர் கோயில் கும்பாபிஷேகத்தின்போது 140 கோடி இந்தியர்களும் வீட்டில் தீபம் ஏற்ற வேண்டும் - பிரதமர் மோடி!
ராமர் கோயில் கும்பாபிஷேகத்தின்போது 140 கோடி இந்தியர்களும் அவரவர் வீட்டில் தீபம் ஏற்றிவழிபட வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அயோத்தி
உத்திர பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோயிலின் கும்பாபிஷேகம் வரும் ஜனவரி 22ம் தேதி நடைபெறுகிறது.
இதையொட்டி, அயோத்தியில் ரூ.15,700 கோடி மதிப்பிலான சர்வதேச விமானநிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. இவற்றை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி நேற்று அயோத்தி வந்தடைந்தார். பின்னர் ரூ.240 கோடி செலவில் மறுசீரமைக்கப்பட்ட ‘அயோத்தி தாம்' ரயில் நிலையத்தை திறந்துவைத்த பிரதமர், தர்பங்கா (பிஹார்) - டெல்லி மற்றும்மால்டா (மேற்குவங்கம்)- பெங்களூரு இடையேயான 2 அம்ருத் பாரத் ரயில் சேவைகளைத் தொடங்கிவைத்தார்.
மேலும், அயோத்தி தாம் - டெல்லி, கத்ரா - டெல்லி, அமிர்தசரஸ்- டெல்லி, கோவை-பெங்களூரு, மங்களூரு- மட்காவ் (கோவா), ஜால்னா (மகாராஷ்டிரா) - மும்பை ஆகிய நகரங்களுக்கு இடையேயான 6 வந்தே பாரத்ரயில் சேவைகளையும் தொடங்கிவைத்தார்.
பிரதமர் மோடி
பின்னர், அயோத்தியில் ரூ.1,463 கோடியில் கட்டப்பட்டுள்ள மகரிஷி வால்மீகி சர்வதேச விமான நிலையத்தையும், ராமர் கோயிலுக்குச் செல்வதற்காக அகலப்படுத்தப்பட்ட ராம்பாத், பக்திபாத், தரம்பாத்,ராம் ஜென்மபூமி பாத் ஆகிய 4 சாலைகளையும் திறந்துவைத்தார்.
இதனையடுத்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி "550 ஆண்டு கால காத்திருப்பு, வேதனைக்கு இப்போது விடிவுகாலம் பிறந்துள்ளது. ஜனவரி 22ம் தேதி நடைபெறும் ராமர் கோயில் குடமுழுக்கு விழாவுக்காக உலகம் முழுவதும் வாழும் இந்துக்களுடன், நானும் ஆவலோடு காத்திருக்கிறேன். அன்றைய விழாவில் அனைவரும் பங்கேற்பது சாத்தியமில்லை.
எனவே, அன்று அயோத்திக்கு வர முயற்சி செய்வதற்குப் பதிலாக, கும்பாபிஷேகத்தின்போது 140 கோடி இந்தியர்களும் அவரவர் வீட்டில் தீபம் ஏற்றிவழிபட வேண்டும். அந்த நாளை தீபாவளியைப் போல பெரிய பண்டிகையாக கொண்டாட வேண்டும்.கும்பாபிஷேகம் முடிந்த பிறகு அயோத்திக்கு வந்து ராமரை கண்குளிர வழிபடலாம்" என்றார்.