தூதரகத்திலிருந்து வெளியேறிய இந்தியர்கள்.. விமானநிலையம் வரை துணைக்குவந்த தலிபான்கள்!

airport Afghanistan indian Taliban
By Irumporai Aug 18, 2021 05:51 PM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆப்கானிஸ்தான் முழுமையாக தலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. இதனால் அவசரமாக இந்தியர்கள் சிலருடன் முதல் விமானம் புறப்பட்டு இந்தியா வந்தது.

ஆனால், தூதரக அதிகாரிகள் உள்ளிட்ட 140 பேரை மீட்பதற்காக அடுத்த விமானத்தை அனுப்புவதற்குள் அங்கு நிலைமை மோசமானது.

இந்த நிலையில் ஆப்கன் வான்வழி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டதால் அங்கு உள்ள இந்தியர்களின் நிலை என்னவென்று கேள்விக்குறி எழுந்த நிலையில் கடந்த திங்கள் நள்ளிரவு 140 இந்தியர்கள் பத்திரமாக விமானநிலையம் வந்த அவர்களுக்கு துணையாக ஆயுதமேந்திய தலிபான்களே வந்தார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இது  குறித்து ஏர் இந்தியா ஊழியர் ஷிரினி பத்தாரே கூறுகையில்,:

நாங்கள் வரும் வழியெல்லாம் அடிக்கொரு சோதனைச் சாவடி போல் தலிபான்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.

சில நேரங்களில் எங்கள் வாகனங்களுக்குத் துணையாக வந்த தலிபான் வாகனத்திலிருந்து ஒருவர் இறங்கி அவ்வப்போது வானத்தை நோக்கிச் சுடுவார். அப்போதெல்லாம் உயிர் நின்றது போல் இருந்தது.

விமானநிலையத்தை அடைந்ததும் எங்களுடன் வந்த தலிபான் வாகனம் திரும்பிச் சென்றது. அதன் பின்னர் விமானநிலையத்தில் 2 மணி நேரம் காத்திருந்தோம். பின்னர் சி17 இந்திய ராணுவ விமானத்தில் ஏறினோம்.

குஜராத்தில் விமானம் திரையிறங்கியது. இந்தியாவுக்குத் திரும்பியதில் பெரும் மகிழ்ச்சி. இந்தியா ஒரு சொர்க்கம் என்று கூறினார். இந்தியாவைச் சேர்ந்த மற்றொருவர் கூறுகையில், நான் என் 2 வயது மகளுடன் என் அலுவலகத்தில் இருந்தேன். அங்கே சில தலிபான்கள் வந்தனர்.

அவர்கள் என்னை ஏதும் செய்யவில்லை. மென்மையாகவே விசாரித்தனர். நான் அச்சத்தில் இருந்தேன். பின்னர் சென்றுவிட்டனர். அவர்கள் செல்லும்போது வாசலில் இருந்த இரண்டு வாகனங்களை எடுத்துச் சென்றதாக  அவர் கூறியுள்ளார்.

மேலும் ஆயுதம் ஏந்திய தலிபான்கள்  இந்தியர்கள் இருந்த வாகனத்தை நோக்கி வழியனுப்புவது போல் கையசைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்திய தூதரக அதிகாரிகள், ஊழியர்கள் வரும் வாகனங்களுக்கு எந்த இடையூறும் செய்யக்கூடாது என இந்தியத் தூதரகத்தின் சார்பில் தலிபான்களிடம் வலியுறுத்தியதாகவும், அதனாலேயே இந்தியத் தூதரகத்தின் வாயிலில் இருந்த தலிபான்கள் வழிநெடுகிலும் பயணத்தை எளித்தாக்க உடன் வந்ததாக  தகவல் வெளியாகியுள்ளது