இப்போ உள்ள மார்டன் இந்திய பெண்கள் குழந்தை பெற தயங்குறாங்க : கர்நாடக அமைச்சர் சர்ச்சை பேச்சு
தற்போது உள்ள மார்டன் பெண்கள் தனித்து வாழவே விரும்புகின்றனர். அவர்கள் திருமணம் செய்தாலும், குழந்தை பெற்றுக் கொள்வதை விரும்புவதில்லை,''என, கர்நாடக மாநில சுகாதார அமைச்சர் டாக்டர் சுதாகர் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகாவில் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. தலைநகர் பெங்களுரில் உள்ள தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனத்தில் உலக சுகாதார தினம் நேற்று கொண்டாடப்பட்டது.
இதில் பங்கேற்ற, கர்நாடக மாநில சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் சுதாகர் பேசியதாவது:
நாட்டில் இப்போதுள்ள நவீன காலத்துப் பெண்கள் தனித்து வாழவே விரும்புகின்றனர் என்பதை வருத்தத்துடன் தெரிவிக்கிறேன். திருமணம் செய்துக் கொண்டாலும், குழந்தை பெற்றுக் கொள்ள அவர்கள் விரும்புவதில்லை.
வாடகை தாய் வாயிலாக குழந்தை பெற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். நம் சிந்தனையில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது; இது நல்லதல்ல. மேற்கத்திய கலாசாரத்தின் தாக்கம் இந்திய மக்களிடம் அதிகரித்து வருவதாக கூறியுள்ளார்.
கர்நாடக மாநில சுகாதார அமைச்சரின் இந்த பேச்சு, பெண்களிடையே கோபத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது.