அடேங்கப்பா... ஒரே போட்டியில் இத்தனை சாதனைகளா? - வரலாறு படைத்த இந்திய மகளிர் அணி
ஐசிசி மகளிர் உலகக் கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீசை தோற்கடித்த இந்திய மகளிர் அணி தோற்கடித்த நிலையில் இப்போட்டியில் ஏராளமான சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன.
கடந்த மார்ச் 4ஆம் தேதி நியூசிலாந்தில் கோலகலமாக தொடங்கிய 50 ஓவர் மகளிர் உலகக் கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. இதில் இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
இதனைத் தொடர்ந்து களம் கண்ட இந்திய வீராங்கனைகளில் தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா அசத்தலாக ஆடி சதமடித்தார். அவருக்கு பக்கபலமாக ஆடிய துணை கேப்டன் ஹர்மன்பிரீத் கவுரும் சதமடிக்க 50 ஓவர்களில் இந்திய மகளிர் அணி 8 விக்கெட் இழப்புக்கு 317 ரன்கள் குவித்தது.
இதனையடுத்து 318 என்ற இலக்குடன் பேட்டிங்கை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு தொடக்க வீராங்கனைகள் டோட்டின் 62 ரன்களும் மேத்யூஸ் 43 ரன்களும் எடுக்க மற்ற வீரர்கள் ரன் குவிக்க தவறினர். இதனால் 162 ரன்களுக்கு அந்த அணி ஆல்- அவுட்டானது. இதன்மூலம் இந்திய அணி 155 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில் இப்போட்டியில் இந்தியாவிற்காக கேப்டன்ஷிப் செய்த மிதாலி ராஜ் மகளிர் உலகக் கோப்பை வரலாற்றில் அதிக போட்டிகளில் கேப்டனாக செயல்பட்ட வீராங்கனை என்ற புதிய சாதனை ஒன்றை படைத்தார்.
இன்றைய போட்டியுடன் 24 உலக கோப்பை போட்டிகளில் மிதாலி ராஜ் கேப்டனாக உள்ளார். இந்த போட்டியில் இந்திய அணி 317 ரன்கள் எடுத்த நிலையில் முதல்முறையாக மகளிர் உலககோப்பை வரலாற்றிலேயே இந்தியா முதல் முறையாக 300 ரன்களை தொட்டுள்ளது. இந்த போட்டியில் ஸ்மிருதி மந்தனா மற்றும் ஹர்மன்பிரீட் கவுர் 4வது விக்கெட்டுக்கு 184 ரன்கள் ரன்கள் எடுத்த நிலையில் அது மகளிர் உலக்கோப்பை வரலாற்றில் அதிக பார்ட்னர்ஷிப் அமைத்த இந்திய ஜோடி என்ற புதிய சாதனை படைக்கப்பட்டது.
இந்த போட்டியில் சதமடித்த இந்தியாவின் துணை கேப்டன் ஹர்மன்பிரீட் கவுர் உலகக் கோப்பை வரலாற்றில் அதிக சதங்கள் அடித்த இந்திய வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார். அவர் இதுவரை 3 சதங்கள் விளாசியுள்ளார். இந்த போட்டியில் சதமடித்த ஸ்மிருதி மந்தனா உலகக்கோப்பையில் தனது 2வது சதத்தை பதிவு செய்தார்.
அவரது முதல் சதமும் 2017 ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் இதே வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அமைந்தது குறிப்பிடத்தக்கது. இதேபோல் ஒரே போட்டியில் 2 இந்திய வீராங்கனைகள் சதம் அடிப்பது இதுவே முதல் முறையாகும். இந்த போட்டியில் ஒரு விக்கெட்டை கைப்பற்றிய இந்திய வீராங்கனை ஜூலன் கோஸ்வாமி மகளிர் உலகக் கோப்பை வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் (40) எடுத்த வீராங்கனை என்ற புதிய உலக சாதனை படைத்தார்.