இலங்கையை அசால்டாக வீழ்த்தி தொடரை தட்டி தூக்கிய இந்திய அணி - குவியும் வாழ்த்து
இலங்கை அணிக்கு எதிரான டி.20 தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணிக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்து வருகிறது.
தொடரை வென்ற இந்திய அணி
இந்திய வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவில் இரு அணிகளும் தலா 1 போட்டியில் வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்த நிலையில்,
இரு அணிகள் இடையேயான டி.20 தொடரை தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி டி.20 போட்டி ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு சூர்யகுமார் யாதவ் 51 பந்துகளில் 112 ரன்களும், சுப்மன் கில் 46 ரன்களும், கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடிய அக்ஷர் பட்டேல் 9 பந்துகளில் 21 ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம், 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 228 ரன்கள் குவித்தது.
இதன்பின் 229 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை துரத்தி களமிறங்கிய இலங்கை அணிக்கு துவக்கமே சரியாக அமையவில்லை. அந்த அணியின் துவக்க வீரர்களான குஷால் மெண்டீஸ் 23 ரன்களிலும், பதும் நிஷான்கா 15 ரன்களிலும் விக்கெட்டை இழந்து வெளியேறினர்.
குவியும் வாழ்த்து
அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்களில் தசுன் ஷனாகா (23), டி சில்வா (22) மற்றும் சாரித் அஸ்லன்கா (19) ஆகிய மூன்று வீரர்களை தவிர மற்ற வீரர்கள், இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் ஒற்றை இலக்க ரன்களிலேயே விக்கெட்டை இழந்து அடுத்தடுத்து வெளியேறியதால், 16.4 ஓவரில் வெறும் 137 ரன்கள் மட்டுமே எடுத்த போது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இலங்கை அணி 91 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்துள்ளது.
இலங்கை அணிக்கு எதிரான இந்த போட்டியில் 91 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம், மூன்று போட்டிகள் கொண்ட டி.20 தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது.
இந்தநிலையில், இலங்கை அணிக்கு எதிரான டி.20 தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணிக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்து வருகிறது.