வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற இந்தியா அணி..!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 119 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
ஒரு நாள் போட்டி
வெஸ்ட் இண்டீஸிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது.
இந்த தொடரின் முதல் இரண்டு போட்டியிலும் வெற்றி பெற்ற இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியிருந்த நிலையில், இரு அணிகள் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி குவின்ஸ் ஓவல் பார்க் மைதானத்தில் நடைபெற்றது.
இந்தியா அணி அபார வெற்றி
இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து இந்திய அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது மழை குறுக்கிட்டதால் போட்டியின் ஓவர் 36ஆக குறைக்கப்பட்டது.
36 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 225 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக சுப்மன் கில் 98 ரன்களும், ஷிகர் தவான் 58 ரன்களும் எடுத்தனர்.
இதன்பின் 226 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய விண்டீஸ் வீரர்கள், இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் வந்த வேகத்தில் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினர்.
அந்த அணியின் நிக்கோலஸ் பூரன் மற்றும் பிராண்டன் கிங் ஆகியோர் தலா 42 ரன்கள் எடுத்து கொடுத்தாலும், மற்ற வீரர்களில் ஒருவர் கூட சொல்லிக்கொள்ளும் அளவிற்கு கூட எடுக்காமல் விக்கெட்டை இழந்ததால் 137 ரன்கள் மட்டுமே எடுத்த போது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த விண்டீஸ் அணி 119 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது.