‘எப்படியாவது காப்பாத்துங்க கடவுளே’ -தோல்வியை தவிர்க்க போராடும் இந்தியா
இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியை தவிர்க்க போராடி வருகிறது.
இந்தியா, இங்கிலாந்து அணிகள் இடையேயான 3வது டெஸ்ட் போட்டி லீட்ஸ் ஹெட்டிங்லே மைதானத்தில் ஆகஸ்ட் 25 ஆம் தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 78 ரன்களுக்கு சுருண்டது.
தொடர்ந்து பேட்டிங்கை தொடங்கிய இங்கிலாந்து அணி 2 ஆம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்பிற்கு 423 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இன்று 3 ஆம் நாள் ஆட்டம் நடைபெற்றது. அடுத்த 8 ரன்களுக்கு எஞ்சிய 2 விக்கெட்டுகளையும் பறிகொடுத்த இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 432 ரன்கள் குவித்தது. இது இந்திய அணியை விட 354 ரன்கள் கூடுதலாகும்.
இதனைத் தொடர்ந்து 2வது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர் கே.எல்.ராகுல் 8 ரன்களுக்கு வெளியேறினார். ரோகித் சர்மா 59 ரன்கள் குவித்து அவுட்டாக புஜாராவும், கேப்டன் கோலியும் ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடினர்.
3 ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 215 ரன்கள் எடுத்துள்ளது. புஜாரா 91 ரன்களுடனும், கோலி 45 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க மேற்கொண்டு 139 ரன்கள் எடுக்க வேண்டியுள்ளது.
இன்னும் 2 நாள் ஆட்டம் மீதமுள்ள நிலையில் போட்டியை டிரா செய்ய இந்திய அணி கடுமையாக போராடி வருகிறது.