168 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி - தொடரை கைப்பற்றி அசத்தல்
168 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, டி20 வரலாற்றில் புதிய சாதனை படைத்துள்ளது இந்திய அணி.
அதிரடி காட்டிய ஷுப்மன் கில்
நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டி.20 போட்டியில் இந்திய அணி 168 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
இந்தியா வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது.
இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவில் இரு அணிகளும் தலா 1 போட்டியில் வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்த நிலையில்,
இரு அணிகள் இடையேயான டி.20 தொடரை தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி டி.20 போட்டி அஹமதாபாத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு சுப்மன் கில் 126* ரன்களும், ராகுல் திரிபாதி 44 ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 234 ரன்கள் குவித்தது.
தோல்வியடைந்த நியூசிலாந்து
இதன்பின் 235 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை துரத்தி களமிறங்கிய நியூசிலாந்து அணி வெறும் 7 ரன் எடுப்பதற்குள் முதல் நான்கு விக்கெட்டுகளை இழந்தது.
டேரியல் மிட்செல் (35) மற்றும் மிட்செல் சாட்னர் (13) ஆகிய இருவரை தவிர மற்ற வீரர்களில் ஒருவர் கூட ஒற்றை இலக்க ரன்னை தாண்டாமல் வந்த வேகத்தில் விக்கெட்டை இழந்து அடுத்தடுத்து வெளியேறியதால் 12.1 ஓவரில் வெறும் 66 ரன்கள் மட்டுமே எடுத்த போது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த நியூசிலாந்து அணி 168 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது.