317 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி
இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 317 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
அதிரடி ரன்குவிப்பில் ஈடுபட்ட விராட் கோலி
இந்தியா வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியிருந்த நிலையில், இரு அணிகள் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி கேரளாவில் நடைபெற்றது.
இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு சுப்மன் கில் 116 ரன்களும், கடைசி வரை இலங்கை வீரர்களை கதி கலங்கவிட்ட விராட் கோலி 110 பந்துகளில் 166 ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம் 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 390 ரன்கள் குவித்தது.
இதன்பின் 391 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை துரத்தி களமிறங்கிய இலங்கை அணியின் முதல் மூன்று வீரர்களும் முகமது சிராஜின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் வந்த வேகத்தில் விக்கெட்டை இழந்து வெளியேறினர்.
இலங்கையை வீழ்த்தி அபார வெற்றி
இலங்கை அணியில் வெறும் மூன்று வீரர்களை தவிர மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னை கூட தாண்டாமல் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து வெளியேறியதால் வெறும் 73 ரன்களுக்கே ஆல் அவுட்டான இலங்கை அணி 317 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது.
இந்திய அணி சார்பில் முகமது சிராஜ் 4 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் மற்றும் முகமது ஷமி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இலங்கை அணியை 317 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வரலாறு படைத்த இந்திய அணி 3-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் முழுமையாக கைப்பற்றியுள்ளது.