நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி!
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டியில் இந்திய அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
ரன் குவித்த இந்திய
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதி போட்டியில் இந்திய அணியும், நியூசிலாந்து அணியும் மோதின.மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 397 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக விராட் கோலி 117 ரன்களும், ஸ்ரேயஸ் ஐயர் 108 ரன்களும், சுப்மன் கில் 80 ரன்களும் எடுத்தனர்.
திணறிய நியூசிலாந்து
இதன்பின் 398 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை துரத்தி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு அந்த அணியின் இரண்டு துவக்க வீரர்களும் தலா 13 ரன்களில் விக்கெட்டை இழந்து பெரும் ஏமாற்றம் கொடுத்தனர். இருவரின் விக்கெட்டையும் முகமது ஷமி கைப்பற்றி அசத்தினார்.
இதன்பின் டேரியல் மிட்செலுடன் கூட்டணி சேர்ந்து சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய கேன் வில்லியம்சனும் 69 ரன்கள் எடுத்த போது முகமது ஷமியின் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக களத்திற்கு வந்த டாம் லதாமும் ஷமியின் பந்துவீச்சில் சிக்கி டக் அவுட்டானார்.
இதன்பின் களமிறங்கிய கிளன் பிலிப்ஸ் 41 ரன்கள் எடுத்த போது பும்ராஹ்வின் பந்துவீச்சில் சிக்கி விக்கெட்டை இழந்தார். நீண்ட நேரம் தனி ஆளாக போராடிய டேரியல் மிட்செல் 119 பந்துகளில் 7 சிக்ஸர் மற்றும் 9 பவுண்டரிகளுடன் 134 ரன்கள் எடுத்த போது முகமது ஷமியின் பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார்.
இந்திய அணி அபார வெற்றி
அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்களும் பெரிதாக ரன் குவிக்காமல் வந்த வேகத்தில் விக்கெட்டை இழந்து அடுத்தடுத்து வெளியேறியதால் 48.5 ஓவரில் 327 ரன்கள் எடுத்த போது ஆல் அவுட்டான நியூசிலாந்து அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து உலகக்கோப்பை தொடரில் இருந்தும் வெளியேறியுள்ளது.
பந்துவீச்சில் இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக முகமது ஷமி 7 விக்கெட்டுகளை கைப்பற்றி வரலாறு படைத்தார். அதே போல் பும்ராஹ், முகமது சிராஜ் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.