ரயில் பயண கட்டணம் உயர்வு - எவ்வளவு தெரியுமா?
ரயில் பயணக் கட்டணத்தை உயர்த்துவதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது.
ரயில் கட்டணம்
ரயில்வே ஊழியர் ஊதியச் செலவு ஒரு லட்சத்து 15 ஆயிரம் கோடி ரூபாயாகவும், ஓய்வூதியச் செலவு 60,000 கோடி ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.

2024-25 நிதியாண்டில் மொத்த ரயில்வே துறையின் செலவு இரண்டு லட்சத்து 63 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. தொடர்ந்து செலவினங்களை சமாளிப்பதற்காக, சரக்கு போக்குவரத்தை அதிகரிக்கவும், குறைந்த அளவிலான பயணிகள் கட்டணத்தை உயர்த்தவும் ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
அதன்படி, 215 கிலோமீட்டர் வரையிலான ரயில் பயணத்திற்கு கட்டண உயர்வு இல்லை. முன்பதிவில்லாத பெட்டிகளில் பயணிக்க 215 கிலோ மீட்டருக்கு மேல் ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு பைசா கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்.
எவ்வளவு உயர்வு
மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் ஏசி அல்லாத பெட்டிகளில் பயணிக்க 1 கிலோ மீட்டருக்கு 2 பைசா உயர்த்தப்படும். 500 கி.மீ தூரம் ஏசி அல்லாத பெட்டியில் பயணிக்கும் பயணிகள் கூடுதலாக 10 ரூபாய் செலுத்த வேண்டும்.
அனைத்து ஏசி வகுப்புகளுக்கும் 1 கிலோ மீட்டருக்கு 2 பைசா கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வின் மூலம் 600 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைக்கும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
புறநகர் ரயில்கள் மற்றும் மாதாந்திர சீசன் டிக்கெட் கட்டணங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.