இந்தியாவில் இணையதள டேட்டா விலை மிக குறைவாக உள்ளது : பெர்லின் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பெருமிதம்

Narendra Modi
By Irumporai May 03, 2022 05:19 AM GMT
Report

ஜெர்மனியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு பிரதமர் ஓலப் ஸ்கால்சை சந்தித்து, இருதரப்பு உறவுகள் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

தொடர்ந்து பெர்லினில் உள்ள திரையரங்கு ஒன்றில் ஏற்பாடு செய்யப் பட்டிருந்த ஜெர்மனி வாழ் இந்திய சமூகத்தினருடனான சந்திப்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

அரசியல் நிலையற்ற சூழலுக்கு இந்தியா முற்றுப்புள்ளி வைத்துள்ளது. கடந்த 3 தசாப்தங்களாக இருந்த அரசியல் நிலையற்ற சூழலை இந்திய மக்கள் தங்கள் வாக்குரிமை மூலம் முடிவுக்கு கொண்டு வந்தனர். 30 ஆண்டுகளுக்குப் பிறகு 2014-ல் முழு பெரும்பான்மையான அரசு தேர்ந்தெடுக்கப்பட்டது.

2019-ல் இந்திய அரசை மக்கள் வலிமையாக்கினர். சீர்திருத்தங்கள் மூலம் நாட்டை மாற்றி வருகிறோம். இன்று இந்தியா வாழ்க்கைத் தரம், கல்வித் தரம் மற்றும் பிற துறைகளிலும் முன்னேறி வருகிறது.

மத்திய அரசு செயல்படுத்தி வரும் வங்கிக் கணக்குகளுக்கு நேரடி பண பரிமாற்றத்தின் திட்டம் மூலம் பயனாளிகளுக்கு முழு அளவில் பயன் கிடைக்கிறது. கடந்த 7-8 ஆண்டுகளில் இந்திய அரசு பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடி பண பரிமாற்றம் செய்வது ரூ.22 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

டெல்லியில் இருந்து 1 ரூபாய் அனுப்பினால், மக்களுக்கு 15 பைசா மட்டுமே சென்றடைகிறது என்று இப்போது எந்த பிரதமரும் சொல்ல வேண்டியதில்லை. உலகளாவிய டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையில் இந்தியாவின் பங்கு 40% ஆக உள்ளது.

இந்தியாவில் தற்போது இணையதள டேட்டா விலை பல நாடுகளால் நம்ப முடியாத வகையில் மிக குறைவாக உள்ளது. 2014 ஆம் ஆண்டில், நம் நாட்டில் 200 முதல் 400 ஸ்டார்ட்அப்கள் மட்டுமே இருந்தன. இன்று நாட்டில் 68,000 க்கும் மேற்பட்ட ஸ்டார்ட்அப்கள் உள்ளன.

நீங்கள் புதிய வகையான ட்ரோன்கள் அல்லது ராக்கெட்டுகள் அல்லது செயற்கைக்கோள்களை உருவாக்க விரும்பினால் இன்று இந்தியா இதற்காக மிகவும் திறந்த மற்றும் திறனை வளர்க்கும் சூழலை வழங்குகிறது. இந்த ஆண்டு இந்திய சுதந்திரத்தின் 75வது ஆண்டைக் கொண்டாடுகிறோம்.

சுதந்திர இந்தியாவில் பிறந்த முதல் பிரதமர் நான். சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் நிறைவடையும் நேரத்தில் இந்தியா எந்த உச்சத்தில் இருக்குமோ, அந்த இலக்கை நோக்கி நாடு வலுவாக அடி எடுத்து வைக்கிறது. இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.