குரங்கு அம்மையை தடுக்க விமான நிலையங்களில் மத்திய அரசு அதிரடி நடவடிக்கை
இந்தியாவில் குரங்கு அம்மையை தடுக்க மத்திய அரசு அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
சமீபத்தில் ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் நூற்றுக்கணக்கானோருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இது மற்ற நாடுகளுக்கும் வேகமாக பரவி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளதால் உலக நாடுகள் அனைத்தும் நோய் தடுப்பு நிலையை தீவிரப்படுத்தியுள்ளது.
இதனிடையே புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனம் நடத்திய பரிசோதனையில் இந்தியாவில் சிலருக்கு குரங்கு அம்மை நோய் பரவி இருக்கலாம் என்று அஞ்சப்படுவதால் மத்திய அரசு அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
அதன்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியாவுக்கு வரும் சர்வதேச பயணிகளிடம் குரங்கு அம்மை நோய் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. அந்த வகையில் விமான நிலையங்கள், துறைமுகங்கள், சர்வதேச சாலை எல்லை வழியாக இந்தியா வருபவர்களிடம் இந்த நோய் பரிசோதனை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக விரிவான வழிகாட்டு நெறிமுறைகளும் வழங்கப்பட்டுள்ளது. இந்திய அரசு குரங்கு அம்மை தொடர்பாகவழங்கிய முதல் வழிகாட்டு நெறி இதுதான் என்பதை தாண்டி ஆப்பிரிக்காவிலிருந்து வரும் பயணிகளிடம் குறிப்பாக பரிசோதனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் பரிசோதிக்கப்படும் மாதிரிகளை எங்கு சோதனைக்கு அனுப்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேசமயம் இந்தியாவில் இதுவரை குரங்கு அம்மை நோயால் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும், பிற நாடுகள் இந்த பாதிப்புகள் கண்டறியப்பட்ட உடனே அதற்கான தடுப்பு நடவடிக்கைகளில் இந்தியா இறங்கிவிட்டதாக மத்திய அரசின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.