இலங்கை அணிக்கெதிரான போட்டியில் இந்திய அணி செய்த தவறு - கடுப்பான ரசிகர்கள்
இலங்கை அணிக்கெதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி செய்த தவறு குறித்து ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
உத்தரபிரதேச மாநில தலைநகர் லக்னோவில் நேற்று நடந்த இந்தியா- இலங்கை அணிகள் இடையேயான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
நாளை 2வது டி20 போட்டி நடைபெற உள்ள நிலையில் முதல் போட்டியில் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டு துறைகளிலும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி ஃபீல்டிங்கில் சொதப்பியது.
குறிப்பாக பவர்ப்ளே ஓவர் முடிவதற்குள் இந்திய வீரர்கள் எளிதான கேட்ச்களை தவறவிட்டனர். இதேபோல் பவுண்டரி எல்லைகளிலும் ஃபீல்டிங்கை சொதப்பலாக செய்தனர். இதனைப் பார்த்த ரசிகர்கள் பெரிய மைதானங்களில் விளையாடும் போது பந்து மிக உயரத்திற்கு சென்றால் வீரர்கள் அதனை பிடிப்பதில் தடுமாறக் கூடாது என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
காரணம் நடப்பாண்டு டி20 உலகக்கோப்பை தொடரானது ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளதால் இதே பீல்டிங் திறனுடன் அங்கு சென்றால் நிச்சயம் தோல்விதான். எனவே இந்திய வீரர்கள் ஃபீல்டிங்கில் முன்னேற வேண்டும் என கிரிக்கெட் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.