அமெரிக்காவிற்குள் நுழைய முயன்ற இந்திய குடும்பத்திற்கு நேர்ந்த கதி
அமெரிக்க எல்லையில் பனியால் ஒரு கைக்குழந்தை உட்பட 4 இந்தியர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கனடா மற்றும் அமெரிக்க எல்லை மாகாணங்கள் கடும் பனிப்புயலால் பாதிக்கப்பட்டு வருகின்றன. இதனிடையே கனடா நாட்டின் எமர்சன் எல்லைப்பகுதியில் வாகனம் ஒன்றில் உயிரிழந்த நிலையில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த ஒரு குழந்தை உள்பட இந்தியாவை சேர்ந்த நான்கு பேரின் உடல்களை மானிடோபா எல்லைப் பாதுகாப்பு படையினர் கண்டுள்ளனர்.
இறந்தவர்களில் 2 பேர் பெரியவர்கள். ஒருவர் நடுத்தர வயது உடையவர். அமெரிக்காவில் மனித கடத்தலில் ஈடுபட்டதாக நான்கு பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் இறந்தவர்கள் அவர்களுடன் தொடர்புடையவர்கள் என கருதப்படுகிறது. அவர்களை வேனில் அடைத்து வைத்து அமெரிக்காவுக்கு கடத்த முயன்ற மனித கடத்தல் கும்பலை சேர்ந்த ஸ்டீவ் ஷாண்ட் என்பவரை எல்லை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.
எல்லையை எளிதாக கடந்து விடலாம் என்று நினைத்து கிளம்பிய அவர்கள் பனியில் சிக்கியிருக்கலாம் என்று கனடா போலீசார் குறிப்பிட்டுள்ளனர். மேலும் எல்லைப்பகுதியில் வெப்பநிலை மைனஸ் 35 டிகிரிக்கு கீழ் சென்று விட்ட நிலையில் பனியில் உறைந்து அவர்கள் உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், நடந்த சம்பவம் குறித்து விளக்கமளிக்குமாறு அமெரிக்கா மற்றும் கனடா நாட்டு இந்திய தூதர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.