“ரிஸ்க்குலாம் எங்களுக்கு ரஸ்க்கு சாபுட்ற மாதிரி”- ஒமைக்ரான் பரவலுக்கு மத்தியில் தெ.ஆப்பிரிக்கா செல்லும் இந்திய கிரிக்கெட் அணி
ஒமைக்ரான் தொற்று உலகிலேயே முதன்முதலில் தென் ஆப்பிரிக்காவில் தான் கண்டறியப்பட்டது.
தற்போது 60க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவியிருந்தாலும், தென் ஆப்பிரிக்காவில் தான் அதிகளவில் பரவி வருகிறது. அடுத்தடுத்த வாரங்களில் உலகம் முழுவதும் மிக வேகமாகப் பரவும் என உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.
இதனால் பல்வேறு நாடுகளும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. குறிப்பாக அதிக பரவல் கொண்ட ஆப்பிரிக்க நாடுகளுடனான விமான போக்குவரத்தை உலக நாடுகள் ரத்துசெய்துள்ளன.
இந்தியாவைப் பொறுத்தவரை விமான சேவைக்கு தடை விதிக்கப்படவில்லை, மாறாக அங்கிருந்து வரும் பயணிகளுக்கு கட்டுப்பாடுகளை அதிகரிக்கப்பட்டுள்ளது.
கட்டாய ஆர்டிபிசிஆர் சோதனை, தொற்று இல்லாவிட்டாலும் கட்டாய வீட்டு தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இது ஒருபுறம் இருந்தாலும் தென் ஆப்பிரிக்க உடனான விளையாட்டு தொடர்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஆகவே பிசிசிஐயும் அந்நாட்டுடனான தொடரை ரத்து செய்ய வேண்டும் என அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தினர்.
ஆனால் தென் ஆப்பிரிக்க தொடரை தள்ளிவைக்க முடியாது என மறைமுகமாக கூறிவிட்ட நிலையில் டி20 தொடரை மட்டும் ஒத்திவைத்துள்ளது.
அதற்கு முன்னதாக மூன்று டெஸ்ட் மற்றும் மூன்று ஒருநாள் போட்டி கட்டாயம் நடந்தே தீரும் என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
அதற்கான இந்திய அணியும் தேர்வு செய்யப்பட்டுவிட்டது. முதலாவதாக டெஸ்ட் போட்டிகள் நடத்தப்படுகின்றன.
26ஆம் தேதி தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டிக்கு டிசம்பர் 16ஆம் தேதி இந்திய வீரர்கள் தென் ஆப்பிரிக்கா பயணம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று முதலே வீரர்கள் அனைவரும் பயோபபுளில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.