கிராமி விருது பெற்ற முதல் இந்திய வம்சாவளிப் பெண் யார் தெரியுமா?
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஃபால்குனி ஷா என்ற பெண் முதல் முறையாக கிராமி விருது வென்று அசத்தியுள்ளார்.
சர்வதேச அளவில் கவனம் பெறும் இசைக்கலைஞர்கள், இசையமைப்பாளர்கள் போன்ற கலைஞர்களுக்கு ஆண்டுதோறும் கிராமி விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டில் 84 பிரிவுகளின் கீழ் இந்த விருதுகள் வழங்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டிற்கான கிராமி விருதுகள் வழங்கும் விழா நேற்றைய தினம் லாஸ் வேகாசில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இந்த நிகழ்ச்சியில் பார்வையாளராக கலந்துக் கொண்டுள்ளார். அவர் தனது மகன் அமீன் ரஹ்மானுடன் இதில் கலந்து கொண்டுள்ளார். இந்நிகழ்ச்சியில் ஃபால்குனி ஷாவின், ‘ஏ கலர்ஃபுல் வேர்ல்டு’ இசை, சிறந்த குழந்தைகளுக்கான ஆல்பம் பிரிவில் வெற்றிபெற்று அவருக்கு கிராமி விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
மும்பையில் பிறந்த ஃபால்குனி ஷா தனது சிறுவயதில் ஜெய்ப்பூர் ஹரானா என்ற பாராம்பரிய இந்துஸ்தானி வகையைச் சேர்ந்த இசையை கற்றுள்ளார். பின்னர் பிரபல பாடகர் மற்றும் சாரங்கி இசைக்கலைஞரான உஸ்தாத் சுல்தான் கானிடம் பாடல் மற்றும் சாரங்கியை அவர் கற்றுத் தேர்ந்தார்.
தொடர்ந்து அமெரிக்காவிற்குச் சென்ற ஃபால்குனி ஷா அங்கு போஸ்டன் நகரில் இயங்கிவந்த இந்தோ - அமெரிக்கன் இசைக்குழுவான கரிஷ்மாவில் முக்கிய பாடகியாக வலம் வந்தார். அதன்பிறகு நியூயார்க் நகரத்திற்கு குடிபெயர்ந்த அவர் சொந்தமாக இசைக்குழு ஒன்றை ஆரம்பித்து நகரம் முழுவதும் பல்வேறு இசைநிகழ்ச்சிகளை நடத்தி வந்தார்.
ஆஸ்கர் விருதுகளை அள்ளிய ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையிலும் பாடிய ஃபால்குனி ஷா கடந்த ஆண்டு ‘ஏ கலர்ஃபுல் வேர்ல்டு’ என்ற குழந்தைகளுக்கான இசை ஆல்பத்தை வெளியிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.