உலக கோப்பையை இந்தியா தான் வெல்லும் - அடித்து சொல்லும் நடிகர் ரஜினிகாந்த்
மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று (15.11.2023) நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதின.
அதிரடி காட்டிய இந்தியா
டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதிரடியாக ஆடிய ரோஹித் 28 பந்துகளில் 47 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.
சிறப்பாக ஆடி அரை சதம் கடந்த மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில், காயம் காரணமாக ஆட்டத்தை விட்டு பாதியில் வெளியேறினார். 65 பந்துகளை சந்தித்த கில் 79 ரன்கள் குவித்த நிலையில் வெளியேறினார்.
இதனையடுத்து வந்த விராட் கோலி 117 ரன்களில் ஆட்டமிழந்தார். சிறப்பாக ஆடிய ஸ்ரேயாஸும் சதத்தைக் கடந்து 70 பந்துகளில் 105 ரன்களை குவித்தார்.
கடைசிக்கட்ட ராகுலின் அதிரடியான 39 ரன்கள் உதவியுடன் இந்திய அணி 50 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 397 ரன்களை குவித்தது.
நியூசிலாந்து தரப்பில் சவுதி 3 விக்கெட்டுகளும், போல்ட் 1 விக்கெட்டும் எடுத்தனர். இதன் மூலம் இந்திய அணி, நியூசிலாந்து அணிக்கு 398 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.
நியூசிலாந்து அணி தோல்வி
பின்னர் ஆடிய நியூசிலாந்து அணிக்கு தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான கான்வேயை 13 ரன்களிலும், ரச்சினையும் 13 ரன்களிலும் முகமது ஷமி வெளியேற்றினார். ஆனால் சிறப்பாக ஆடிய மிட்செல் சதமடித்தார்.
அடுத்து வந்த சாப்மேனை குல்தீப் அவுட் ஆக்க, சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த மிட்செல் ரன் ரேட் அழுத்தத்தால் சிக்சர் அடிக்க முயன்று ஷமி பந்தில் 134 ரன்களில் வீழ்ந்தார்.
தொடர்ந்து வந்த வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில் நியூசிலாந்து அணி 48.5 ஓவர்களில் 327 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் இந்திய அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சிறப்பாக பந்து வீசிய ஷமி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
கோப்பை நமக்கு தான்
இதற்கிடையே இந்த போட்டியை நடிகர் ரஜினிகாந்த் மும்பை வான்கடே மைதானத்தில் தனது மனைவி லதாவுடன் சேர்ந்து நேரில் கண்டு ரசித்தார்.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதிய அரையிறுதி போட்டி குறித்து பேசுகையில்,
“முதலில் கொஞ்சம் டென்ஷன் ஆகிவிட்டேன். அதன் பின்னர் நியூசிலாந்து தரப்பில் 2, 3 என விக்கெட்டுகள் விழுந்ததும் ஆட்டம் நன்றாக சென்றது. கண்டிப்பாக இந்த முறை கப் (உலக கோப்பை) நமக்குத்தான். இந்தப் போட்டியில் வெல்ல 100 சதவீதம் முகமது ஷமிதான் காரணம்” என தெரிவித்தார்.