உலகின் மாசான 30 நகரங்களில் 22 நகரங்கள் இந்தியாவில் உள்ளன - அதிர்ச்சி தரும் ஆய்வு
உலகின் அதிக மாசுபாடான நகரங்கள் பட்டியலில் இந்தியாவின் பல்வேறு நகரங்கள் இடம்பெற்றுள்ளன. உலகின் அதிக மாசுபாடு மிக்க நகரங்கள் பட்டியலை பிரபல ஆங்கில இதழ் வெளியிட்டுள்ளது. அதன்படி மொத்தம் உள்ள 30 நகரங்களில் 22 நகரங்கள் இந்தியாவில் இருப்பது இந்தியாவில் காற்றின் தரம் குறித்து எடுத்துரைப்பதாக அமைந்துள்ளது.
இந்தியாவின் காற்று மாசுபாட்டிற்கு முக்கிய காரணிகளாக போக்குவரத்து, சமையல் எரிவாயு, மின் உற்பத்தி. தொழிற்துறை, கட்டுமானத்துறை, குப்பை எரித்தல் மற்றும் விவசாய கழிவு எரித்தல் போன்றவை இருப்பதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக போக்குவரத்து காற்று மாசுபாட்டுக்கு முதன்மை எதிரியாக இருப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
டெல்லி தவிர்த்து உலகின் மாசுபாடுமிக்க 30 நகரங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள நகரங்கள் உத்தரப்பிரதேசத்தின் காசியாபாத், புலந்சாகர், பிஸ்ரக், ஜலால்புர், நொய்டா, கிரேட்டர் நொய்டா, கான்பூர், லக்னோ, மீரட், ஆக்ரா மற்றும் முசாபர்நகர். ராஜஸ்தானில் உள்ள பிவாரி. ஹரியானாவில் உள்ள ஃபரிதாபாத், ஜிந், ஹிசார், ஃபதேஹபாத், பந்த்வாரி, குருக்கிராம், யமுனா நகர், ரோஹ்தக் மற்றும் தருஹேரா. பீகாரில் உள்ள முஃசாபர்பூர் ஆகியவை ஆகும்.
மேலும் மாசுபாடு மிக்க தலைநகரங்கள் பட்டியலில் டெல்லி முதலிடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.