விஜய் மல்லையாவுக்கு தண்டனை - 18ம் தேதி வழங்கப்படும் - உச்ச நீதிமன்றம் அறிவிப்பு

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டிருக்கும் விஜய் மல்லையாவுக்கான தண்டனை விவரம் வரும் ஜனவரி 18ம் தேதி அறிவிக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

கர்நாடகாவைச் சேர்ந்தவர் தொழிலதிபர் விஜய் மல்லையா. இவர் 9,000 கோடி ரூபாய் வங்கிக் கடன் பெற்று, அதை திருப்பி செலுத்தாமல் வெளிநாடு தப்பி சென்று விட்டார். ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள அவரை, இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கான நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள்.

விஜய் மல்லையா 2017ம் ஆண்டு 'டியாஜியோ' நிறுவனத்திடம் பெற்ற 2.80 கோடி ரூபாயை தன் மகன் சித்தார்த் மற்றும் மகள்களுக்கு வழங்கி இருக்கிறார். இது கர்நாடக உயர் நீதிமன்றத்தின் உத்தரவை மீறிய செயல் என்பதால், விஜய் மல்லையாவுக்கு எதிராக வங்கிகள் கூட்டமைப்பு உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கில் விஜய் மல்லையா குற்றவாளி என்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. வழக்கில் மல்லையா குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு ஓராண்டுக்கு மேலாகிவிட்டது. ஆனால், அவருக்கான தண்டனை மீதான விசாரணை மட்டும் இன்னும் முடிந்த பாடில்லை.

நீதிமன்றத்தில் மல்லையா ஆஜராக போதிய அவகாசம் வழங்கப்பட்டு விட்டது. இனிமேல் காத்திருக்க முடியாது. அதனால் மல்லையாவுக்கு வழங்கப்படும் தண்டனை மீதான விசாரணை, வரும் ஜனவரி 2ம் வாரத்தில் நடத்தப்பட்டு,18ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. 

உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்