பாகிஸ்தான் வர அனுமதி மறுத்த அதிகாரிகள் - கர்ப்பிணிக்கு எல்லையில் பிறந்த குழந்தை

india-world newborn-baby
By Nandhini Dec 06, 2021 09:48 AM GMT
Report

அட்டாரி எல்லையில் பாகிஸ்தான் அதிகாரிகளால் அனுமதி மறுக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணிற்கு அழகான குழந்தை பிறந்துள்ளது. இந்தக் குழந்தைக்கு ‘பார்டர்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணம், ரஞ்சன்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பலம் ராம். இவர் மனைவி நிம்பு பாய். இவர்கள் உட்பட 98 பேர் இந்தியாவில் உள்ள புனித தலங்களுக்கு சென்று வழிபடுவதற்காகவும், தங்கள் உறவினர்களை சந்திப்பதற்காகவும் லாக்டவுனுக்கு முன்பாக, பாகிஸ்தானிலிருந்து வந்தனர்.

புனித தலங்களுக்கு சென்றுவிட்டு பாகிஸ்தானில் உள்ள தங்கள் சொந்த ஊருக்கு செல்ல முடிவு செய்தார்கள். ஆனால், இந்திய- பாகிஸ்தான் எல்லையான அட்டாரியில், இவர்களிடம் போதுமான ஆவணங்கள் இல்லை என்று கூறி பாகிஸ்தான் அதிகாரிகள் இவர்கள் வருவதற்கு அனுமதி மறுத்துவிட்டனர். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்த அவர்கள், அங்குள்ள கூடாரத்தில் தங்கி இருந்தார்கள்.

அவர்களுக்கு 3 வேளை உணவு, உடை உள்ளிட்டவற்றை அந்தப் பகுதியில் உள்ள கிராமத்தினர் கொடுத்து உதவி செய்து வந்துள்ளனர். இந்நிலையில், கர்ப்பிணியான நிம்பு பாய்க்கு கடந்த 2ம் தேதி பிரசவ வலி ஏற்பட்டது. இதனையடுத்து, அட்டாரி எல்லைப் பகுதியை சேர்ந்த கிராமத்தினர் அவருக்கு மருத்துவ வசதிகளை ஏற்பாடு செய்தார்கள். நிம்பு பாயிக்கு அழகான ஆண் குழந்தைப் பிறந்துள்ளது.

அந்தக் குழந்தை பார்டரில் பிறந்ததால் ‘பார்டர்’ என்றே குழந்தைக்குப் பெயர் சூட்டியுள்ளனர். பலம் ராம் தவிர, பாகிஸ்தானின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த லக்யா ராம், மோகன், சுந்தர் தாஸ் உட்பட பலர் அதே கூடாரத்தில் தங்கி இருக்கிறார்கள். இதில் லக்யா ராமுக்கு கடந்த வருடம் ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு ‘பாரத்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.   

பாகிஸ்தான் வர அனுமதி மறுத்த அதிகாரிகள் - கர்ப்பிணிக்கு எல்லையில் பிறந்த குழந்தை | India World Newborn Baby