ஒமைக்ரான் வைரஸ் - இந்தியாவில் 38 ஆக உயர்வு
ஆந்திரா மற்றும் கேரளாவில் முதன்முறையாக ஒமைக்ரான் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்தியாவில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்திருக்கிறது.
கொரோனாவிலிருந்து உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் தற்போது, இந்தியா உட்பட 40க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி வருகிறது. ஒமைக்ரான் அதிவேகமாக பரவும் தன்மை கொண்டது என்றும், இந்த வைரஸ் தடுப்பூசியின் செயல்பாட்டினையும் குறைக்கும் தன்மை கொண்டது என்று விஞ்ஞானிகள் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துதுள்ளனர்.
இந்தியாவில் ஒமிக்ரான் தொற்று வேகமாக பரவுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தி இருக்கிறது. வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகள் விமான நிலையங்களில் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். இதனிடையே இத்தாலியிலிருந்து சண்டிகர் வந்த 20 வயது இளைஞருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டது. அதேபோல் மகாராஷ்டிராவில் மேலும் ஒருவருக்கு ஒமைக்ரான் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நாக்பூரில் 40 வயது ஆண் ஒருவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் அவருக்கு ஒமைக்ரான் தொற்று இருப்பது தெரியவந்தது. இந்நிலையில், கேரளாவில் ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்திலிருந்து கேரள மாநிலம் எர்ணாகுளம் வந்த பயணி ஒருவருக்கு இருப்பது பரிசோதனையில் தெரியவந்தது. இதனால், இந்தியாவில் மகாராஷ்டிராவில் 18, ராஜஸ்தானில் 9, டெல்லியில் 2, குஜராத்தில் 3, சண்டிகரில் 1, கர்நாடகாவிலும் 1, சண்டிகரில் 1, கேரளாவில் 1 என ஒமிக்ரான் தொற்றின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 38 ஆக அதிகரித்திருக்கிறது.
