'ஒரு சூரியன், ஒரு உலகம், ஒரு நரேந்திர மோடி' : மாநாட்டில் இந்திய பிரதமருக்கு புகழாரம் சூட்டிய பிரிட்டன் பிரதமர்
கிளாஸ்கோவில் நடைபெற்ற பருவநிலை மாநாட்டில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், ‛ஒரு சூரியன், ஒரு உலகம், ஒரு நரேந்திர மோடி,' என இந்திய பிரதமர் மோடி குறித்து புகழ்ந்து பேசியது தற்போது வைரலாகி வருகிறது.
ஐ.நா., வின் 26-வது பருவ நிலை மாநாடான சி.ஓ.பி., 26, ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் சமீபத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட 120க்கும் மேற்பட்ட நாட்டுத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த மாநாட்டில், பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகள், சூரிய மின் உற்பத்தி, காற்றாலை மின் உற்பத்தி போன்ற மரபுசாரா எரிசக்தி திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
அப்போது, இந்த மரபுசாரா எரிசக்தி திட்டங்களில் முன்னிலையில் உள்ள இந்தியா குறித்து பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் பெருமையாக பேசி இருக்கிறார்.
இது குறித்து அவர் பேசுகையில், ‛இந்த பருவ நிலை மாற்றத்தை கையாள ஒருவர் இருக்கிறார். ஒரு மணி நேர சூரிய வெளிச்சத்தை பயன்படுத்தி ஒரு வருடம் மின் சக்தியை பெற முடியும் என்று உலகிற்கு புரிய வைத்தவர். அவர்தான் இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி. ஒரு சூரியன், ஒரு உலகம், ஒரு நரேந்திர மோடி என்றார்.
போரிஸ் ஜான்சனின் இந்த பேச்சை கேட்டு, பிரதமர் மோடி மற்றும் அரங்கில் இருந்த அனைவரும் பலத்த சத்தத்துடன் கரவொலி எழுப்பினார்கள்.
