ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் குடியரசுத் தலைவரை சந்திக்கிறார்கள்!

1 week ago

குடியரசுத் தலைவர் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் சந்திக்க உள்ளனர்.

மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த ஒரு வருடங்களாகவே பல்வேறு மாநிலங்களில் விவசாயிகள் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில், கடந்த 3-ம் தேதி உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி அருகே உள்ள மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் கிராமத்தில் நிகழ்ச்சி ஒன்றில் உத்தரபிரதேச மாநில துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள சென்றார். அப்போது, விவசாயிகள் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

அப்போது, திடீரென கார் ஒன்று விவசாயிகள் மீது ஏற்றியது. இதில் 2 விவசாயிகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் காயமடைந்தார்கள். பின்னர் ஏற்பட்ட வன்முறையில் 4 விவசாயிகள், ஒரு பத்திரிகையாளர் உள்பட 9 பேர் உயிரிழந்தார்கள்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. லக்கிம்பூரில் விவசாயிகளின் மீது காரை ஏற்ற கொலை செய்த வழக்கில், மத்திய இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஷ்ரா காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.

இவ்விவகாரத்தில் தொடர்பாக மத்திய இணையமைச்சர் பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், லக்கிம்பூர் கெரி வன்முறை தொடர்பாக குடியரசுத் தலைவர் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் சந்திக்க இருக்கிறார்கள். இந்த சந்திப்பானது நாளை காலை 11.30 மணி அளவில் நடைபெற உள்ளது. 

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்