இந்திய விண்வெளி சங்கம் – பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்!
இந்திய விண்வெளி சங்கத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்க உள்ளார். இந்திய விண்வெளி சங்கத்தை (ஐஎஸ்பிஏ) பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்க உள்ளார். இந்நிகழ்ச்சியில் அவர் விண்வெளி துறையின் பிரதிநிதிகளுடன் உரையாட உள்ளார்.
இது குறித்து, பிரதமர் மோடி நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், “அக்டோபர் 11,காலை 11 மணிக்கு, இந்திய விண்வெளி சங்கத்தை தொடங்குவதற்கான திட்டத்தில் நான் சேர்கிறேன். இந்த துறையின் முன்னணி பங்குதாரர்களுடன் தொடர்புகொள்வதற்கான வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். விண்வெளி மற்றும் கண்டுபிடிப்பு உலகில் ஆர்வமுள்ளவர்கள் கட்டாயம் நிகழ்ச்சியை பார்க்கவும்”என்று பதிவிட்டுள்ளார்.
இந்திய விண்வெளி சங்கம் (ISPA) என்பது விண்வெளி மற்றும் செயற்கைக்கோள் நிறுவனங்களின் முதன்மையான தொழில் சங்கமாகும். இது இந்திய விண்வெளித் துறையின் கூட்டு குரலாக இருக்க விரும்புகிறது. கொள்கை வாதத்தை மேற்கொள்வதோடு, அரசு மற்றும் அதன் நிறுவனங்கள் உட்பட இந்திய விண்வெளி களத்தில் உள்ள அனைத்து பங்குதாரர்களுடனும் இச்சங்கம் இணைந்து செயல்படும்.
தற்சார்பு இந்தியா பற்றிய பிரதமரின் தொலைநோக்குப் பார்வையை எதிரொலிக்கும் வகையில், இந்தியாவை தற்சார்பு மிக்க, தொழில்நுட்ப ரீதியாக முன்னேற்றம் அடைந்த மற்றும் விண்வெளி அரங்கில் முன்னணியில் கொண்டுவர இந்த அமைப்பு உதவும் என்று பிரதமர் அலுவலகம் ஒரு அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.
மேலும், ISPA இன் உறுப்பினர்களில் லார்சன் அண்ட் டூப்ரோ, நெல்கோ (டாடா குழுமம்), ஒன்வெப், பார்தி ஏர்டெல், மேப்மைண்டியா, வால்சந்த்நகர் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் அனந்த் டெக்னாலஜி லிமிடெட் ஆகியவை அடங்கும். மற்ற முக்கிய உறுப்பினர்களில் கோட்ரெஜ், ஹியூஸ் இந்தியா, அஜிஸ்டா-பிஎஸ்டி ஏரோஸ்பேஸ் பிரைவேட் லிமிடெட், பிஇஎல், சென்டம் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் மேக்சர் இந்தியா ஆகியவை அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
