வரலாறு படைத்தது இந்திய இளைஞர் அணி - 5வது உலகக்கோப்பையை வென்று அசத்தல்
u-19 உலகக்கோப்பையை இந்திய அணி 5வது முறையாக வென்று சாதனை படைத்துள்ளது.
வெஸ்ட் இண்டீஸில் நடைபெறும் U19 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.
அதன்படி களமிறங்கிய அந்த அணி வீரர்கள் இந்திய பந்துவீச்சாளர்களின் தாக்குதலில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தவித்தனர். 47 ரன்களை சேர்ப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து ஜேம்ஸ் ரூவ் மற்றும் ஜேம்ஸ் செல்ஸ் ஆகியோரின் அதிரடியில் 44.5 ஓவர்களில் 189 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி தரப்பில் ராஜ்பவா 5 விக்கெட்டுகளையும், ரவிக்குமார் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
பின்னர் 190 ரன்கள் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடியது. சிறப்பாக ஆடிய ஷேக் ரஷீத் 50, ராஜ் பாவா 35, நிஷாந்த் 50 ரன்கள் விளாச இந்திய அணி 47.4 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 195 ரன்களை சேர்த்து 5வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்தது.
சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “19 வயதுக்குட்பட்டோர் அணிக்கும், துணை பயிற்சியாளர்களுக்கும், தேர்வுக்குழுவினருக்கும் உலகக் கோப்பையை இவ்வளவு சிறப்பாக வென்றதற்கு வாழ்த்துகள்..
நாங்கள் அறிவித்துள்ள 40 லட்சம் ரொக்கப் பரிசு ஒரு சிறிய பாராட்டுச் சின்னம்தான்.., ஆனால் அவர்களின் முயற்சிகள் நாங்கள் வழங்கும் மதிப்பிற்கு அப்பாற்பட்டவை..”என்று கங்குலி பதிவிட்டுள்ளார்.