எவனாலையும் இவர தடுக்க முடியாது...உலக கோப்பையை இந்தியா தான் வெல்லும் - இன்சமாம் உல் ஹக் உறுதி
பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணிக்கு வெறித்தனமான வெற்றியை பெற்றுத்தந்த விராட் கோலியை முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் இன்சமாம் உல் ஹக் பாராட்டி பேசியுள்ளார்.
ரன் குவித்த பாகிஸ்தான்
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 16வது போட்டி கடந்த 23 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்த போட்டியில் இந்திய அணியும், பாகிஸ்தான் அணிகளும் மோதின. ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் குவித்தது.
மிரள விட்ட விராட் கோலி
160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக வந்த ரோஹித் சர்மா 4 ரன்களிலும், கே.எல்.ராகுல் 4 ரன்களிலும், சூர்யகுமார் யாதவ் 13 ரன்களிலும், அக்ஷர் பட்டேல் 2 ரன்களிலும் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர்.
பின்னர் 5வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த பாண்டியா - விராட் கோலி ஜோடி பொறுப்பான ஆட்டதை வெளிப்படுத்தினர்.
இந்த நிலையில் ஹர்திக் பாண்டியா 37 பந்துகளில் 40 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். பின்னர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி கடைசி வரை களத்தில் அவுட் ஆகாமல் இருந்து அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
கோலியை பாராட்டிய பாகிஸ்தான் முன்னாள் கேப்டன்
அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய விராட் கோலியை பலரும் பாராட்டி வருகின்றனர். அந்த வகையில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனான இன்சமாம் உல் ஹக்கும் விராட் கோலியை வெகுவாக பாராட்டியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர், “விராட் கோலி களத்தில் இருந்தால் எதை பற்றியும் கவலைப்பட தேவை இல்லை என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது. பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி விளையாடிய விதத்தை வார்த்தைகளால் பாராட்டுவது கூட கடினம்.
அபத்தான பேட்ஸ்மேன்கள் பலர் உள்ளனர், ஆனால் விராட் கோலி அவர்கள் அனைவரையும் விட சிறந்த பேட்ஸ்மேன், இதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்திய அணி உலகக்கோப்பையை வெல்ல வேண்டுமென்றால் அதற்கு விராட் கோலியின் பங்களிப்பு நிச்சயம் முக்கியமானதாக இருக்கும், விராட் கோலியின் இந்த பார்மே இந்திய அணிக்கு கோப்பையையும் வென்று கொடுக்கும்.
விராட் கோலி இல்லாமல் உலகக்கோப்பையை வென்று விடலாம் என இந்திய அணி நினைத்திருந்தால், அது நடக்காத காரியம் என்பது இப்போது அவர்களுக்கு தெரிந்திருக்கும். விராட் கோலியின் பார்மில் இல்லாததால் தான், சமீபகாலமாக இந்திய அணி சொதப்பி வந்தது, ஆனால் விராட் கோலி தனது பழைய ஆட்டத்திற்கு தற்போது திரும்பிவிட்டார், இனி இந்திய அணி அதிக ஆபத்தானது. பாகிஸ்தான் அணிக்கு எதிரான வெற்றிக்கான பெருமையை, இந்திய அணி மொத்தமாக விராட் கோலிக்கே கொடுக்க வேண்டும்” என்று பேசினார்.